கோபாலய்யங்காருக்குத் தன்னை மணம் புரிந்து கொள்ளச் சம்மத மில்லையென்று தெரிந்த மாத்திரத்தில், விசாலாக்ஷி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவியிடம் தனக்கு வேறெங்கேனும் நல்ல வரன் தேடி வாழ்க்கைப்படுத்த வேண்டுமென்று மேன்மேலும் மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தாள். அதற்குப் பந்துலுவின் மனைவி "நீ எங்களுடன் இங்கேயே இன்னும் பத்துப் பதினைந்து நாள் இரு. இன்னும் சில தினங்கள் வரை பந்துலு கோபாலய்யங்காரின் விவாகத்துக்கு வேண்டிய காரியங்களிலேயே கருத்துச் செலுத்த நேரும். உன் விஷயத்தைக் கவனிக்க அவருக்கு அவகாசம் இராது. பத்து நாள் ஆன பின்பு நாங்கள் ராஜமகேந்திரபுரத்துக்குப் போவோம். நீயும் எங்களுடன் வா. எப்படியாவது உனக்கு நான் வரன் தேடிக் கொடுக்கிறேன். ஆனால் அவசரப்படுவதில் யாதொரு காரியமும் நடக்காது. சிறிது காலம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்" என்றாள். இதுகேட்டு விசாலாக்ஷி:- "மயிலாப்பூரில் என்னுடைய அம்மாங்கார் (மாமன் மகள்) இருக்கிறாள். அவளுடைய புருஷன் ஹைகோர்ட் வக்கீல் உத்தியோகம் பார்க்கிறார். பந்துலுகாரு கோபாலய்யங்காரின் விஷயத்தைக் கவனித்துக் கொண்டிருக்கையில், நான் இங்கு சும்மா ஏன் இருக்க வேண்டும்? இந்தப் பத்து நாளும் நான் போய் மயிலாப்பூரிலே தாமஸிக்கிறேன். பத்து நாள் கழிந்தவுடன் இங்கு வருகிறேன்" என்றாள். பிறகு அவர்கள் இவ் விஷயத்தைக் குறித்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் விசாலாக்ஷி தன் இஷ்டப்படி செய்வதைத் தடுக்கத் தமக்கு சம்மதமில்லை யென்றும், அவள் மயிலாப்பூரில் பத்து நாள் இருந்துவிட்டு வரலாமென்றும், இதற்கிடையில் அவசரம் நேர்ந்தால் தாம் மயிலாப்பூருக்குக் கடிதமனுப்பி விசாலாக்ஷியைத் தருவித்துக் கொள்ளக் கூடுமென்றும் தெரிவித்தார். "மயிலாப்பூரில் உன் பந்துலுவின் விலாச மெப்படி?" என்று பந்துலு கேட்டார். |