பக்கம் எண் :

விசாலாக்ஷிக்கு நேர்ந்த சங்கடங்கள்

வக்கீல் சோமநாதய்யரின் மனைவிக்குப் பெயர் முத்தம்மா. நமது விசாலாட்சியைக் கண்டவுடன் இவள் மிகுந்த ஆவலுடன் நல்வரவு கூறி உபசாரம் பண்ணினாள். இவ்விருவரும் அத்தங்கார் அம்மங்கார் என்ற உறவு மாத்திரமேயன்றி பால்ய முதலாகவே மிகவும் நெருங்கிய நட்புடன் பழகிவந்தவர்கள்.

முத்தம்மா திருநெல்வேலியில் தெப்பக் குளத் தெருவில் பிறந்து வளர்ந்துவந்தவள். திருநெல்வேலியிலிருந்து வேளாண்குடி மிகவும் சமீப மாதலால் இவ் விருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சுற்றுப் பக்கங்களிலுள்ள கிராமங்களில் எங்கு எந்த பந்துக்கள் வீட்டில் என்ன விசேஷம் நடந்த போதிலும், அங்கு விசாலாட்சியும் வருவாள்; முத்தம்மாளும் வந்து விடுவாள். வந்தால், இவ் விருவர் மாத்திரம் எப்போதும் இணைபிரிவதே கிடையாது. சாப்பாட்டுக்கு உட்கார்வதென்றால், இருவரும் கூடவே தொடை மேல் தொடை போட்டுக்கொண்டு உட்கார்வார்கள். விளையாட்டிலும் பிரிய மாட்டார்கள். விளையாட்டு முடிந்தால் இருவரும் கைகோத்த வண்ணமாகவே சுற்றித் திரிவார்கள். இராத்திரி, இருவரும் ஒரே பாயில் கட்டிக்கொண்டு படுத்திருப்பார்கள். மேலும், ஒரு சமயத்தில் முத்தம்மாளை அவளுடைய பிதா வேளாண்குடியில் தன் தமக்கை வீட்டிலேயே, அதாவது, விசாலாட்சியின் தாய் வீட்டிலேயே, ஆறேழு மாசம் இருக்கும்படி விட்டிருந்தார். அது எப்போதென்றால், பத்தாம் வயதில் விசாலாட்சி தாலி யறுத்த சமயத்தில். அப்போது முத்தம்மா வந்து வேளாண்குடியில் சில மாதங்களிலிருந்தால்தான் தன் மகளுக்கு ஒருவாறு ஆறுதலேற்படு மென்று கருதி விசாலாட்சியின் தாய் தன் தம்பிக்கு அவசரமாகச் சொல்லியனுப்பினாள்.