பக்கம் எண் :

விசாலாக்ஷிக்கு நேர்ந்த சங்கடங்கள்

தமக்கையின் வார்த்தையைத் தட்ட மனமில்லாமல், அவர் அங்ஙனமே முத்தம்மாளை வேளாண்குடியில் கொண்டு விட்டிருந்தார். ஒரே வீட்டில் ஒன்றாகக் குடியிருந்தபோது அவ்விருவரின் உளங்களும் ஒட்டியே போய்விட்டன. வேளாண்குடியிலிருந்து திரும்பித் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகுங்கூட நெடுங்காலம் வரை இரா வேளைகளில் கனவிலெல்லாம் முத்தம்மா விசாலாட்சியுடன் சம்பாஷணை நடத்துவது போலவே பேசிக் கொண்டிருப்பாள்.

விசாலாட்சியோ வெனில், அப் பிரிவு நிகழ்ந்து நெடுங்காலம் வரை பகலிலேயே தன்னுடைய மற்றத் தோழிப் பெண்களைக் கூப்பிடும்போது 'முத்தம்மா, முத்தம்மா' என்று கூப்பிடுவாள். இப்படி அளவு கடந்த பால்ய சிநேகமுடைய இவ்விருவரும், முத்தம்மா புக்ககத்துக்கு வந்த பிறகு ஒரு வரை யொருவர் சந்திக்கவேயில்லை. சோமநாதய்யர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து கும்பகோணம் காலேஜிலேயே பீ.ஏ. பரீக்ஷை தேறினார். முத்தம்மாளுடைய பிதா அவளுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்து மதுரை, திருச்சினாப் பள்ளி காலேஜ்களைப் பரிசோதனை செய்து முடித்துக் கடைசியாகக் கும்பகோணம் காலேஜுக்கு வந்து சோமநாதய்யரைக் கண்டு தக்க மாப்பிள்ளை யென்று நிச்சயித்தார். அந்தக் காலத்தில் வரசுல்கம் - அதாவது மாப்பிள்ளையைப் பெண் வீட்டார் பணங் கொடுத்துக் கிரயத்துக்கு வாங்குதல் - என்ற வழக்கம் கிடையாது. கன்யா சுல்கம் - அதாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கிரயங் கொடுத்து வாங்குதல் என்ற வழக்கமே நடைபெற்று வந்தது. எனவே, சோமநாதய்யர் ஏழைகளுடைய பிள்ளையாதலால், கன்யா சுல்கம் கொடுத்து விவாகம் செய்து கொள்ள வழி தெரியாமல் "என்னடா, செய்வோம்!" என்று தத்தளித்துக் கொண்டிருந்தார். அவருடைய உருவ லக்ஷணங்களையும் படிப்புத் திறமையையும் உத்தேசித்து அவருக்கே தமது மகளைக் கன்யா சுல்கம் வாங்காமல், அதாவது இனாமாக, மணம்புரிந்து கொடுத்து விடலாமென்று முத்தம்மாளின் பிதா தீர்மானித்தார்.