சோமநாதய்யர் திருநெல்வேலிக்கு வந்து பெண்ணுடைய அழகையும் புத்திக் கூர்மையையும் கண்டு வியந்து அவளை மணம் புரிந்துகொள்ள உடம்பட்டார். தனக்கு விவாகம் முடிந்த பின்னர் முத்தம்மா விசாலாட்சியை ஓரிரண்டு முறை தான் சந்திக்க நேர்ந்தது. முத்தம்மா ருதுவாய், அவளுக்கு ருது சாந்தியாய் அவள் புக்ககத்துக்குச் சென்ற பின்னர் அவளும் விசாலாட்சியும் ஒரு முறைகூடச் சந்திக்க நேரமில்லை. அவள் கும்பகோணத்துக்கு வந்துவிட்டாள். பீ, ஏ., பி.எல். பரீக்ஷை தேறி, சோமநாதய்யர், ஹைகோர்ட் வக்கீலாய் கும்பகோணத்தில் சில வருஷங்கள் உத்தியோகம் பண்ணி விட்டு, அப்பால் பணம் ஏறிப்போய் அதினின்றும் அதிகப் பணத்தாசை கொண்டு மயிலாப்பூரில் வந்து ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு வாங்கி அதில் குடியிருந்து சென்னை ஹைகோர்ட்டிலேயே வக்கீல் உத்தியோகம் பண்ணிக் கொண்டு வருகிறார். ஆதலால், இப்போது, பல வருஷங்களுக்குப் பின் புதிதாகச் சந்தித்ததில், முத்தம்மாளும் விசாலாட்சியும் சிநேக பரவசராய் ஆனந்த ஸாகரத்தில் அழுந்திப் போயினர். முத்தம்மாளுக்கும் இருபத்தைந்து வயதுதானிருக்கும். அவளுக்கு மூன்று ஆண் குழந்தைகளிருந்தன. மூத்தவனுக்கு ஒன்பது வயதிருக்கும். அவன் பெயர் ராமநாதன். அடுத்த பிள்ளைக்கு ஆறு வயதிருக்கும். அவன் பெயர் ராமகிருஷ்ணன். அடுத்த குழந்தைக்கு மூன்று வயது. அதன் பெயர் அநந்த கிருஷ்ணன். முத்தம்மாளுடைய மாமியார் ஒருத்தி அந்த வீட்டிலேயே இருந்தாள். அவளுக்கு அறுபது வயதிருக்கும். அவள் விதவை. அவள் பெயர் ராமுப்பாட்டி. அவளுக்கு க்ஷயரோகம், அன்று, காசரோகம்; அதாவது, சீக்கிரத்தில் கொல்லுகிற கொடூரமான க்ஷயமில்லை. நோயாளியை நெடுங்காலம் உயிருடன் வதைத்து வதைத்துக் கடைசியில் கொல்லும் மாதிரி. இராத்திரி ஏழு மணியாய் விட்டால் அவள் இருமத்தொடங்கி விடுவாள். பாதிராத்திரி, ஒரு மணி, காலை இரண்டு மணிவரை மகா பயங்கரமாக இருமிக் கொண்டேயிருப்பாள். அந்த இருமலைக் கேட்டால், கேட்பவருடைய பிராணன் இரண்டு நிமிஷத்துக்குள்ளே போய்விடும் போலிருக்கும். ஆனால், ராமுப்பாட்டி சென்ற முப்பது வருஷங்களாக அப்படித்தான் இருமிக் கொண்டு வருகிறாள். அவளுடைய பிராணன் அணுவளவுகூட அசையவில்லை. |