தலைமயிர் வளர்த்துக்கொண்டே ஓரிரண்டு வருஷம் நாங்கனேரியில் அவளுடைய தாயுடன் பிறந்த மற்றொரு மாமன் வீட்டில் சந்திரிகையுடன் வந்து குடியிருந்தாள். அந்த ஊரில் அந்தணர்கள் அவள் மீது அபாரமான பழிதூற்றத் தொடங்கி விட்டார்கள். அந்தத் தூற்றுதல் பொறுக்க மாட்டாதபடியாலேதான் அவள் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு வழி நெடுகத் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு சென்னப்பட்டணம் வந்து சேர்ந்திருக்கிறாள். "இந்த ஊரில் எனக்குப் பழி பொறுக்கமுடியவில்லை; மாமா, நான் காசிக்குப் புறப்பட்டுப் போய் கங்கைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்து நாளடைவில் என் பிராணனை விட்டுவிடுகிறேன். எனக்கு வழிச்செலவுக்கு ஏதேனும் பணம் கொடும்; நான் அங்கே சென்று பிச்சை யெடுத்து இந்தக் குழந்தை சந்திரிகையையும் காப்பாற்றி நானும் பிழைத்துக்கொள்கிறேன்" என்று அவள் நாங்கனேரியை விட்டுப் புறப்படுமுன் தன் மாமனிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள். "இந்தக் குழந்தைக்கு விவாகம் பண்ணவேண்டிய பருவம் நேர்ந்தால் அப்போதென் செய்வாய்?" என்று மாமா கேட்டார். "அங்கே நம்முடைய தமிழ் தேசத்துப் பிராமணர் அனேகர் குடியேறி யிருக்கிறார்கள். இனி மேன்மேலும் அதிகமாகக் குடியேறி வருவார்கள். யாத்திரைக்காக வேறு, வருஷந்தோறும் நம்மவர் அனேகர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அத்தனை ஜனங்களில் என் சந்திரிகைக்கொரு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான்?" என்று விசாலாட்சி கேட்டாள். |