இப்போது, அதாவது 1905-ஆம் வருஷ ஆரம்பத்தில் கார் காலத்தில் ஏகாதசி இரவில், மயிலாப்பூர் வக்கீல் சோமநாதய்யர் வீட்டில் தரைப்பகுதியில் ஓரறையில் விசாலாட்சி சந்திரிகையுடன் படுத்திருந்த கதையை மேலே சொல்லுவோம். அவளுடைய கரிய கூந்தல் அந்த நேர்த்தியான விளக்கொளியில் மிக அழகாகப் பரந்துகிடந்தது. அவளுடைய முகம் பூர்ணசந்திரனைப் போலே ஒளி வீசிற்று. அவளுடைய மார்பு மெல்லிய பச்சைப் பட்டு ரவிக்கையின் மீது வனப்புறப் பூரித்து நின்றது. அவளுடைய மார்புத் துணி தூக்கத்திலே கழன்று போய்விட்டது. தேவ ஸ்திரீயோ, கந்தர்வ ஸ்திரீயோ என்று தேவ கந்தர்வர் கண்டாலும் மயங்கத்தக்கவாறு அத்தனை எழிலுடன் படுத்திருந்தாள். அவள் அறைக்கதவைத் தாழ்ப்போடவில்லை. கிழவி ராமுப்பாட்டியின் இருமல் சத்தம் காதில் விழாதபடி, சோமநாதய்யர் தம் பத்தினியுடள் மாடிமேல் கொல்லைப் புறத்திலிருந்த அறையில் - அதாவது கிழவியினுடைய அறையிலிருந்து எத்தனை தூரம் தள்ளியிருக்கச் சாத்தியப்படுமோ, அத்தனை தூரத்தில் - இராத்திரிகளிலே படுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அன்று ஏகாதசி இரவில் சோமநாதய்யரின் மனைவி முத்தம்மா அவருடன் படுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், |