அவள் அன்று மாதவிடாயாதலால் வீட்டுக்கு விலக்குற்றாவளாய், வெளித் திண்ணையில் ஒரு மூங்கிலறை கட்டி அதற்குள் நேர்த்தியான திரைகள் கட்டி ஒரு கட்டில் மெத்தை போட்டு அதன்மீது படுத்திருந்தாள். அவளுடைய மூன்றாங் குழந்தையாகிய அநந்தகிருஷ்ணன் மாத்திரம் அவளுடன் படுத்திருந்தான். ராமநாதனும் ராமகிருஷ்ணனும் மேலே சோமநாதய்யரின் கட்டிலுக்கும் அவருடைய மனைவியின் கட்டிலுக்கும் புறத்தே குழந்தைகளுக்கென்று போட்டிருந்த மூன்றாங் கட்டிலின் மீது படுத்திருந்தனர். நள்ளிரவு. சோவென்று மழை கொட்டுகிறது. அந்த மழையாகிய தாயின் பாட்டின் குரலில் மயங்கிப்போன குழந்தைகளைப் போல் ராமுப் பாட்டியும், தோட்டத்தில் வெளிக் குச்சிலில் படுத்திருந்த தோட்டக் காவலனும், திண்ணையில் படுத்திருந்த முத்தம்மாளும், அவளருகே அநந்த கிருஷ்ணனும், உள்ளே விசாலாக்ஷியும் சந்திரிகையும், மேலே ராமநாதனும் ராமகிருஷ்ணனும் எல்லாரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி விட்டனர். அப்போது ஒரு ஆள் மாத்திரம் நித்திரை செய்யவில்லை. அது நம்முடைய சோமநாதய்யர். சோமநாதய்யருக்கு வயது அப்போது சுமார் முப்பதிருக்கும். ஆள் நல்ல அழகன். 'ஸாண்டோ' இரும்புகுண்டு போட்டு அவருடைய இரண்டு புஜங்களும் அழகாகப் பருத்திருந்தன. தோட் சதைகள் நன்கு திரண்டிருந்தன. முன்னங்கைகள் செவ்வனவே உருட்சி பெற்றிருந்தன. விரல்கள் உறுதி பெற்றிருந்தன. மார்பு நேர்த்தியாகப் படைத்திருந்தது. வயிறு நன்றாகப் படிந்திருந்தது. மேலும் பலவித அப்பியாஸங்களால் அவருடைய தொடைகளும் கால்களும் வலிமையும் உறுதியும் அழகுறச் சமைந்திருந்தன. ஆனால் அவருக்குத் தலைமயிர் மாத்திரம் கொஞ்சம் நரைக்கத் தொடங்கிவிட்டது. கொஞ்சம் வழுக்கையுமுண்டு. கண்பார்வை கொஞ்சம் சொற்பம். அதற்காக ஐரோப்பியக் கண்சோதனை வைத்தியரிடமிருந்து உயர்ந்த விலையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அதற்குத் தங்கக் கம்பி போட்டு மாட்டிக் கொண்டிருந்தார். முகம் நன்றாக க்ஷவரம் பண்ணி மிகவும் தளதளப்பாகவும் அழகாகவு மிருந்தது. அவர் மாத்திரம் அன்றிரவு நித்திரை புரியவில்லை யென்றேன். ஏன்? என்ன செய்து கொண்டிருந்தார்? மெல்ல மாடியை விட்டுக் கீழே இறங்கினார். விசாலாக்ஷி படுத்திருந்த அறைக்குப் புறம்பே வந்து நின்றார். கதவை மெல்ல அசைத்துப் பார்த்தார். கதவு விசாலாட்சியின் சூதற்ற தன்மையால் திறந்து கிடந்தது. உள்ளே நுழைந்தார். விசாலாக்ஷி படுத்திருந்த கட்டிலின் பக்கத்தே போய் நின்றுகொண்டு அந்த திவ்யமான ஒளியில் அவளுடைய திவ்ய விக்கிரகத்தைக் கண்டார். தன்னை மறந்து போய் அவள் மேலே கையைப் போட்டார். அவள் திடுக்கிட்டு விழித்து இவரைப் பார்த்தவுடன் |