பக்கம் எண் :

விசாலாக்ஷிக்கு நேர்ந்த சங்கடங்கள்

அஞ்சி மார்புத் துணியை நேரே போர்த்துக் கொண்டாள். அப்பால் இவரை நோக்கி

மிகவும் கோபத்துடன்; - "இங்கு எதன் பொருட்டாக இந்த நேரத்தில் வந்தீர்?" என்று கேட்டாள். இவர் ஏதோ வழவழ வென்று மறு மொழி சொன்னார். இவருடைய சொற்களின் ஒலியாலும் முகக் குறிகளாலும் இவருடைய ஹிருதயம் சுத்தமில்லை யென்பதை அவள் உணர்ந்துகொண்டு தன் இடுப்பில் சொருகியிருந்த கூரிய கத்தியொன்றை எடுத்து இவருடைய மார்புக்கு நேரே நீட்டினாள். இவர் பயந்து போய் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். இவர் இங்ஙனம் நிற்பதைக் கண்டு விசாலாக்ஷி இடிபோன்ற உரத்த குரலில் "இங்கிருந்து வெளியேறிப் போம்" என்றலறினாள்.

"குழந்தையை எழுப்பிவிடாதே" என்று சோமநாதய்யர் மெல்ல ஜாடைகள் பேசுவது போலே கிளுகிளுத்துச் சொன்னார். முன்னைக் காட்டிலும் உரப்பாக விசாலாக்ஷி முப்பத்து மூன்று இடிகள் சேர்ந்து இடிக்கும் குரலில் "போம்; இங்கிருந்து வெளியேறி!" என்று மற்றொரு முறை கர்ஜித்தாள். சோமநாதய்யர் வெலவெலத்துப் போய் வெளியேறி மாடிக்குச் சென்று தன் அறைக்குள்ளே போய், அறைக் கதவைச் சார்த்தித் தாழிட்டு, விளக்கை யணைத்துவிட்டு உள்ளே கட்டில் மீது படுத்துக்கொண்டு மேலேல்லாம் போர்வை போட்டு மூடிக் கண்களை இருக மூடிக்கொண்டு தூங்க முயன்றார். ஆனால் அவருக்குத தூக்கம் வரவில்லை. உடம்பெல்லாம் வியர்த்தது. போர்வையைக் கழற்றியெறிந்தார். குளிரெடுத்தது. மறுபடி போர்வையை எடுத்து மூடிக்கொண்டார். கைகால் உளைச்சல் சகிக்க முடியவில்லை. நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டுவது போன்ற வேதனை யுண்டாயிற்று. அவருடைய ஹிருதயத்தில் ஆயிரம் பிசாசுகள் சேர்ந்து நர்த்தனம் செய்வதுபோன்ற பலவகைப்பட்ட வேதனை ஏற்பட்டது; அவருக்குத் தூக்க மெப்படி வரும்? கீழே விசாலாக்ஷி, இவர் வெளியேறியவுடன் தன் அறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு மறுபடி கட்டிலின்மேல் வந்து படுத்துச் சில க்ஷணங்களுக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து விட்டாள். மழை சரசரவென்று பொழிந்துகொண்டிருக்கிறது.