பக்கம் எண் :

சந்திரிகையின் கதை - விடுதலை

ஒருகால் விடுதலை யுற்றான்
       எப்போதும் விடுதலை யுற்றான்"

மறுநாட் பொழுது விடிந்தது. சோமநாதய்யர் வீட்டில் சிராத்தம், அவருடைய பிதாவுக்கு. முத்தம்மா தூரங்குளித்து வீட்டு வேலைக்கு மீண்டுவிட்டாள். முத்துசுப்பா தீட்சிதரும், குப்புசாமி தீட்சிதரும் பிராமணார்த்த பிராமணராக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்விருவருள்ளே முத்துசுப்பா தீட்சிதரே புரோகிதர். இவ்விருவரும் காலையில் பத்து மணிக்கே வந்துவிட்டார்கள். ஆனால் பகல் இரண்டு மணி வரை சோமநாதய்யர் மெத்தையைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை. அவருக்குப் பலமான தலை நோவு.

இதனிடையே தீட்சிதரிருவரும் சும்மா பதுமைகள்போல் உட்கார்ந்திருக்க மனமில்லாமல் வேதாந்த விசாரணையில் புகுந்தனர்.

முதுசுப்பா தீட்சிதர் சொன்னார்:- "ஜீவன் முக்தி இகலோகத்தில், அதாவது, இந்த சரீரத்தில் சாத்தியம்" என்றார்.

"ஆனால் இந்த சரீரத்தில் ஏற்படும் முக்தி எப்போதைக்கும் சாசுவதமாக நிற்பது நிச்சயமில்லை" என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார்.

"உமக்கு விடுதலை என்றால் இன்னதென்ற விஷயமே புலப்படவில்லை யென்று தெளிவுபட விளங்குகிறது. விடுதலை யென்பது ஒருகாற் பெறப்படுமானால் மறுபடி தளையென்பதே கிடையாது. முக்திக்குப் பிறகு பந்தமில்லை. சர்வபந்த நிவாரணமே முக்தி. அந்த சர்வபந்த நிவாரணமாவது சர்வதுக்க நிவாரணம், சர்வ துக்கங்களையும் ஒரே யடியாகத் தொலைத்து விடுதல். அந்த நிலைமை பெற்ற பிறகும் ஒருவன் மறுபடி பந்தத்துக்குக் கட்டுப்பட இடமுண்டாகுமென்று சொல்லுதல் பொருந்தாது" என்று முத்துசுப்பா தீட்சிதர் சொன்னார்.

"சுவர்க்க லோகத்திற்குப் போன பிறகும் அங்கிருந்து வீழ்ச்சியேற்படுவதாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே. அதன் தாத்பர்யமென்ன?" என்று குப்புசாமி தீட்சிதர் கேட்டார்.

"அந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. ஜீவன் முக்திக்கு நான் சொன்னது தான் சரியான அர்த்தம். அதை எந்த சாஸ்திரத்திலும் பார்த்துக்கொள்ளலாம்" என்று முத்துசுப்பா தீட்சிதர் சொன்னார்.

இவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து நெடுநேரம் வார்த்தையாடிக் கொண்டிருந்தார்கள்.