கடைசியாக சோமநாதய்யர் மாடியை விட்டுக் கீழேயிறங்கி வந்தார். அவர், "இந்த தர்க்கத்தின் விஷயமென்ன?" என்று கேட்டார். "ஒருமுறை ஜீவன் முக்தி பெற்றால் அது எப்போதைக்கும் சாசுவதம்தானா? மீட்டும் பந்தப் ப்ராப்தி ஏற்படுமா? என்ற விஷயத்தைக் குறித்து விசாரணை செய்கிறோம்" என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார். "இந்த விஷயத்தில் தங்களுடைய அபிப்ராய மெப்படி?" என்று சோமநாதய்யரை நோக்கி முத்துசுப்பா தீட்சிதர் கேட்டார். "எனக்கு வேதாந்த விவகாரங்களில் பழக்கம் போதாது" என்று சோமநாதய்யர் சொன்னார். திடீரென்று விசாலாக்ஷி அவர்களுக்கு முன்னே தோன்றி, "ஜீவன் முக்தி இவ் வுலகில் சாத்திய மென்பதே பொய். நீங்கள் அதை யடைந்திருக்கிறீர்களோ? அடைந்தோர் யாரையேனும் பார்த்திருக்கிறீர்களோ?" என்று கேட்டாள். "சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார்; அவர் பெரிய ஜீவன் முக்தர்" என்று சோமநாதய்யர் சொன்னார். அன்று சாயங்காலம் முத்தம்மாளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு விசாலாக்ஷி சந்திரிகையுடன் மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டுப் பட்டணம் தங்கசாலைத் தெருவிலிருந்த மற்றொரு பந்துவின் வீட்டில் போய் இறங்கினாள். இந்த பந்து யாரெனில் விசாலாக்ஷியின் பெரிய தாயார் மகள். அந்த அம்மாள் பெயர் பிச்சு. அவளுடைய புருஷனாகிய சங்கரய்யர் தங்கசாலைத் தெருவில் மிகவும் கீர்த்தியுடன் மிட்டாய்க்கடை வைத்துக் கொண்டிருந்தார். அதில் அவருக்குக் கன லாபம்; அவர் கையில் தங்கக் காப்பு; வயிர மோதிரங்கள்; கழுத்தில் பொற்சரளி. |