பக்கம் எண் :

விடுதலை

பார்வதியை மறந்து தவம் செய்து கொண்டிருந்த சிவபிரான் மீது மன்மதன் அம்புகள் போட்டபோது, அவர் கோபங் கொண்டு மன்மதனை எரித்தாரேயன்றி, அவன் அம்புகளின் திறமையை விழலாக்கி மறுபடி யோகம் பண்ணத்தொடங்கினாரோ? அன்று; அவர் காமனம்புகளுக்குத் தோற்று ஜகன்மாதவை மணம் புரிந்து கொள்ளத் திருவுளங் கொண்டருளினார். மேலும், மன்மதன் மகா விஷ்ணுவின் குமாரன், பிரமாவுக்குச் சகோதரன். அவனே பிரமா. அவனாலே படைப்புத் தொழில் தோன்றுதல் பிரத்யக்ஷமன்றோ?

நித்யானந்த பால சந்நியாஸி ரிக்வேத முழுதையும் ஸாயண பாஷ்யத்துடன் படித்தவர். உபநிஷத்துக்களில் முக்கியமான தசோப நிஷத்துக்களை சங்கரபாஷ்யத்துடன் கற்றுணர்ந்தவர். மற்றும் எண்ணற்ற அத்வைத நூல்களிலும் விசிஷ்டாத்வைத நூல்களிலும், தர்க்கம் மீமாம்ஸை யோகம் ஸாங்க்யம் முதலிய சாஸ்திரங்களிலும், புராண இதி ஹாஸங்களிலும், காவியங்களிலும், நாடகங்களிலும் அபாரமான பயிற்சியுடைமையால், ஹிந்து மதத்துக்கும் நாகரிகத்துக்கும் தக்க பிரதிநிதியாகக் கருதத் தக்கவர்.

தவிரவும், ஹிந்தி, வங்காளி, மஹாராஷ்டிரம், தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ் இந்த ஆறு பாஷைகளிலும் மிக உயர்ந்த தேர்ச்சி கொண்டவராய், இவற்றில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சாஸ்திரங்களையும் காவியங்களையும் நன்கு பயின்று சிறந்த அறிவுத் தெளிவு படைத்தவர். எனவே, இவர் சொல்லும் வேதாந்தம் வெறுமே வாய்ப்பேச்சு மாத்திரமன்று. உள்ளத்தில் பலவித ஆராய்ச்சிகளாலும், உயர்ந்த கேள்விகளாலும், தெளிந்த வாதங்களாலும் நன்றாக அழுந்திக் கிடந்த கொள்கை. இவருக்கு ஜீவன்முக்தி பதம் ஏற்படுவதற்கு ஸ்திரீயில்லாத குறைதான் ஒரு பெருந் தடையாக நின்றது. ஏனெனில், பொருளில்லாவிடினும் கல்வியில்லாவிடினும் ஒருவன் ஜீவன்முக்தி பதமெய்தலாம். ஆனால் காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன் முக்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது.