பக்கம் எண் :

விடுதலை

பௌத்த மதத்தின் மேம்பாட்டினாலே தான், ஆரம்பத்தில் பெண்ணுடன் கூடிவாழும் வாழ்க்கையை விட்டு முக்தி தேடப் புகும் வழக்கம் இந்நாட்டிலும் உலகத்திலும் ஊர்ஜிதப் பட்டதென்று நினைக்க ஹேது இருக்கிறது. பூர்விக வேதரிஷிகள் எல்லோரும் பத்தினிகளுடன் வாழ்ந்ததாகவே முன்னூல்கள் சொல்லுகின்றன. பௌத்த மதத்திலிருந்து தான் ஹிந்து மதமும் பிற மதங்களும் ஒரேயடியாக உலகத்தைத் துறந்து விடுவதாகிய நித்ய சந்நியாஸ முறையைக் கைக்கொண்டனவென்று கருதுகிறேன். வேதரிஷிகள் மோக்ஷத்துக்குச் சாதனமாகச் செய்த வேள்விகளிளெல்லாம் அவர்களுடன் மனைவியருமிருத்தல் அவசியமாகக் கருதப்பட்டது. பூர்வ விஷயங்கள் எங்ஙனமாயினும் "இல்லறமல்லது நல்லறமன்று" என்னும் ஒளவை வாக்கியத்தையே நான் பிரமாணமாகக் கொண்டிருக்கிறேன். காதல் தவறான வழிகளில் செல்லும்போதும் உண்மையினின்றும் நழுவும் போதும் மாத்திரமே, அது இவ் வுலகத்தில் பெருந் துன்பங்களுக்கு ஹேதுவாகிறது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப் பெரிய சாதனமாகும். 'உண்மையான காதலின் பாதை மிகவும் கரடுமுரடானது' என்று ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கிலக் கவியரசர் சொல்கிறார். அந்தக் கரடுமுரடான பாதையிலே ஒருவன் சிறிது தூரம் மனத் தளர்ச்சி யில்லாமலும் பாவ நெறியில் நழுவிச் செல்லாமலும் உண்மையுடன் செல்வானாயின் இன்பத்தை சுத்த நிலையில் காணலாம். இவ்வுலக இன்பங்கள் சாசுவதமில்லையென்றும் க்ஷணத்திலே தோன்றி மறைவன என்றும் சொல்வோர் சித்தத்தில் உறுதியில்லாதவர்கள். இவ் வுலக இன்பங்கள் எண்ணத்தொலையாதன. இவ்வுலகத்தின் காட்சியே முதலாவது பெரும் பேரின்பம். சூரியனும், வெயிலும், பட்சிகளும், இனிய தோற்றமுடைய மிருகங்களும், சோலைகளும், மலைகளும், நதிகளும், காடுகளும், அருவிகளும், ஊற்றுக்களும், வானவேளியும், வானமூடியும், சந்திரனும், நிலவும், நக்ஷத்திரங்களும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத ஆனந்தந் தருவன.