ஏழை மானிடரே! இவையெல்லாம் சாசுவதமல்லவா? க்ஷணந்தோறும் தோன்றி மறையும் இயல்பு கொண்டனவா? தனித் தனி மரங்கள் மறையும். ஆனால் உலகத்தில் காடுகளில்லாமல் போகாது தனிப்பக்ஷிகளும் மிருகங்களும் மறையும். ஆனால் மிருகக் கூட்டமும் பக்ஷி ஜாதியும் எப்போதும் மறையாது. இவற்றின் நிலைமை இங்ஙனமாக, மலை, கடல், வானம், இடைவெளி, சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் இவை எப்போதும் மாறுவனவல்ல. எப்போதோ யுகாந்தரங்களில் இவையும் மாறக் கூடுமென்று சாஸ்திரிகள் ஊகத்தாலே சொல்லுகிறார்கள். ஆனால் அந்த ஊகவாதத்தைப் பற்றி நாம் இப்போது கவனிக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும் எத்தனையோ கோடி வருஷங்களுக்குப் பிறகு இவை ஒருவேளை அழியக் கூடுமென்று அந்த சாஸ்திரிகள் சொல்லுமிடத்தே நாம் அவற்றை நித்திய வஸ்துக்களாகப் போற்றுதல் தவறாகாது. இது நிற்க. இன்னும் உலகத்தில் மனிதனுக்கு நெடுங்கால இன்பங்கள் வேறெத்தனையோ இருக்கின்றன. நேராக உண்டு வந்தால், அதாவது பசியறிந்து உண்பதென்ற விரதங் கொண்டால், மனிதருக்கு உணவின்பம் எப்போதும் தெவிட்டாது. நோயின்றி இருந்தால் ஸ்நானத்தின் இன்பம் என்றும் தெவிட்டாது. இன்னும் நட்பு, கல்வி, சங்கீதம் முதலிய கலைகள் எக்காலமும் தெவிட்டாத இன்பங்கள் இவ்வுலகத்தில் மனிதருக்கு எண்ணின்றி நிறைந்து கிடக்கின்றன. இப்படியிருக்க இவ்வுலக இன்பங்கள் க்ஷணத்தில் தோன்றி மறையும் இயல்புடையன என்றும், நீர்மேற் குமிழிகளொத்தன என்றும் சொல்வோர் அறிவில்லாதோர், சோம்பேறிகள், நெஞ்சுறுதி யில்லாதோர். |