இன்பமயமான இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும் காதலின்பமே சாலவுஞ் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியுங் கொண்டு நின்றால், அது எப்போதும் தவறாததோர் இன்ப ஊற்றாகி மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்து விடும். ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயையே, ஒரு ஸ்திரீ ஒரு மனிதனையே, மாறுதலின்றிக் காதல் செய்து வருதலாகிய வழக்கம் மனிதருக்குள் ஏற்படுமாயின் அவர்கள் காதலின்பம் எத்துணை சிறந்த தென்பதையும் எத்தகைய பயன்கள் தருவதென்பதையும் தாமே எளிதில் உணர்ந்து கொள்ள வல்லோராவர். இங்ஙனம் ஆலோசனை புரிந்து நித்யாநந்தர் என்ற பால சந்நியாஸி தாம் விசாலாக்ஷி மீது காதல் கொண்டது தவறில்லை யென்று தீர்மானித்துக் கொண்டார். ஒருநாள் மாலையில் நித்யாநந்தரும் விசாலாக்ஷியும் மிட்டாய்க்கடை சங்கரய்யர் வீட்டு மேடையில் தனியே சந்தித்தார்கள். அவ்விருவருள் நெடுநேரம் சம்பாஷணை நடந்தது. தாம் ஸன்யாஸத்தை விட்டு நீங்கி லௌகிக வாழ்க்கையில் புகுந்து விசாலாக்ஷியை மணம் புரிந்துகொள்ள நிச்சயித்ததற்குள்ள காரணங்களை யெல்லாம் அவர் விசாலாக்ஷியிடம் விரிவாக எடுத்துரைத்தார். அவளும் அக்காரணங்கள் நியாயமானவையே யென்று மிகவும் சுலபமாக அங்கீகாரம் செய்து கொண்டாள். கதையை வளர்த்துப் பிரயோஜன மென்ன? அவ்விருவரும் சந்திரிகை சகிதமாக உடனே புறப்பட்டு எழும்பூரில் வீரேசலிங்கம் பந்துலு இருந்த வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு போகு முன்னாகவே நித்யாநந்தர் தம்முடைய காவியுடையைக் கழற்றி எறிந்துவிட்டு வெள்ளை வேஷ்டியும், நேர்த்தியான சட்டையும், பஞ்சாபித் தலைப்பாகையும் அணிந்து கொண்டார். |