பக்கம் எண் :

விடுதலை

"இந்த லௌகிக ரூபத்தில் சுவாமிகளைப் பார்த்தால் நேபாளத்து ராஜா மகனைப் போல் இருக்கிறது" என்று சங்கரய்யர் சொன்னார். "இன்னும் என்னை ஸ்வாமிகளென்று சொல்லாதேயுங்கள். சந்நியாசக் கோலத்தையும் தொலைத்தேன்; பழைய நித்யாநந்தனென்ற பெயரைக்கூடத் தொலைத்துவிட்டேன். இனிமேல் எனது பிரிய காந்தையாகிய விசாலாக்ஷியின் பெயருக்கேற்ப விசுவநாத சர்மா என்று பெயர் வைத்துக்கொள்வேன்" என்றார். எனவே, நானும் இக்கதையில் இனிமேல் இவருக்கு நித்யாநந்தர் என்ற பெயரை நீக்கி விசுவநாத சர்மா என்ற பெயரையே வழங்கிவருதல் அவசியமாகிறது.

விசுவநாத சர்மாவை இந்த லௌகிக வேஷத்தில் பார்த்த மாத்திரத்திலே விசாலாக்ஷிக்கு ஏற்கெனவே அவர் மீதேற்பட்டிருந்த கண் தலை தெரியாத காதல் முன்னிலும் ஆயிர மடங்கு அதிகமாய், அவளை வெறி கொண்டவள் போலாக்கிவிட்டது.

இவ்விருவரும் வீரேசலிங்கம் பந்துலு விருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, விசாலாட்சி பந்துலுவிடத்திலும் அவர் மனைவி யிடத்திலும் தன்னை விசுவநாத சர்மா மணம் செய்து கொள்ள இணங்கிய செய்தியையும், அவ்வாறு இணங்கும்படி நேர்ந்த பூர்வ விருத்தாந்தங்களையும் எடுத்து விஸ்தாரமாகச் சொன்னாள். வீரேசலிங்கம் பந்துலுவுக்கு அளவிறந்த மகிழ்ச்சி யுண்டாய்விட்டது. ஏற்கெனவே இவ்விஷயத்தில் அவர் பல இடங்களில் முயற்சி செய்து பார்த்து வெற்றிபெற வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய முயற்சி யில்லாமலே தமது விருப்பம் நிறைவேறிவிட்டமை கண்டு அவருக்கு அத்தனை பூரிப்புண்டாயிற்று.