"எல்லாம் தெய்வச் செயல், நாமொன்று நினைக்க தெய்வமொன்று செய்கிறது" என்று சொல்லி அவர் மனமாரக் கடவுளைப் போற்றித் தொழுதார். பிறகு விசுவநாத சர்மாவையும் விசாலாட்சியையும் பிரம ஸமாஜத்தில் சேர்த்தார். கோபாலய்யங்காருடைய விவாகம் நடந்து இரண்டு வாரத்துக்குள் மறுபடி சென்னை பிரம ஸமாஜ ஆலயத்திலேயே, அந்த ஸமாஜ விதிகளின்படி விசாலாட்சிக்கும் விசுவநாத சர்மாவுக்கும் விவாகம் நடந்தேறிற்று. விவாகம் நடந்த ஒரு வாரத்துக்குள் மிட்டாய்க்கடை சங்கரய்யரின் முயற்சியாலும் வேறு சில நண்பர்களின் முயற்சியாலும் நமது விசுவநாத சர்மாவுக்கு ஒரு உத்தியோகம் ஏற்பட்டது. தங்கசாலைத் தெருவிலே மூன்று, நான்கு குஜராத்தி லக்ஷப் பிரபுக்களின் பிள்ளைகளுக்கு ஹிந்தி, ஸம்ஸ்கிருதம், இங்கிலீஷ் மூன்றும் இராப்பாடம் சொல்லிவைக்க வேண்டியது. இதற்காக அவருக்கு அறுபது ரூபாய் மாதந்தோறும் சம்பளம் கிடைத்தது. சங்கரய்யர் வீட்டுக்குச் சமீபத்தில் இரண்டு மனைகளுக்கப்பால் ஒரு வீடு காலியாக இருந்தது. சிறிய வீடு. கீழே இரண்டு மூன்று அறைகள். உயர்ந்த மாடி. அந்த வீட்டுக்குப்பின் அழகான தோட்டமிருந்தது. அதில் ஒரு சிறிய கூரை பங்களா புதிதாகத் தயார் பண்ணி, அதில் நாற்காலி, மேஜை, புஸ்தகங்கள், பிள்ளைகள் வந்தால் உட்காருவதற்கு நாற்காற் பலகைகள் முதலியன வாங்கி வைப்பதற்குரிய செலவெல்லாம் சங்கரய்யர் செய்தார். அந்த வீட்டில் புதிதாக விவாகமான தம்பதிகளை சங்கரய்யர் குடியேற்றினார். இவருக்கு விசுவநாத சர்மாவிடம் முன்னைக் காட்டிலும் நூறு பங்கு அதிக பக்தி ஏற்பட்டது. சில மாதங்கள் கழிந்த பிறகு, மேற்கூறிய குஜாராத்திப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வரும்படி தவிரவும் விசுவநாத சர்மாவுக்கு வேறு வரும்படி கிடைக்கத் தொடங்கிற்று. ஆரம்பத்தில் அவர் சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலீஷ், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு வியாசங்களும், தலையங்கங்களும் எழுதி சாஸ்திர விஷயங்களைப் போலவே லௌகிக விஷயங்களிலும் பயிற்சியால் உயர்ந்த ஞானமேற்படுத்திக் கொண்டார். எழுதும் திறமையிலோ, |