பக்கம் எண் :

விடுதலை

இங்கிலீஷிலும், தமிழிலும் அவருக்குச் சமமான தொழிலாளி இந்த தேசத்திலேயே குறைவென்று கூறலாம். அதனால் பத்திராதிபர்கள் அவரெழுதும் வியாசங்களை மிகவும் ஆவலுடன் ஏற்றுக்கொண்டு தக்க சம்பளம் கொடுக்கத் தொடங்கினார்கள். இங்கு கொஞ்சம் கை தேறியவுடனே, அவர் தக்க மனிதர்களுடைய சிபார்சால் பம்பாய், கல்கத்தா முதலிய வெளி நகரங்களில் பிரசுரமாகும் உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கும், இங்கிலாந்து, அமெரிக்காவிலுள்ள பத்திரிகைகளுக்கும் விஷயதானம் செய்யும் பதவி பெற்றார். இதிலெல்லாம் அவருக்கு மாசந்தோறும் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாத வரும்படி வரத் தொடங்கிற்று. அவர் தீராத உழைப்பாளியாய் விட்டார்.

அவருடைய முகத்தில் முன்னிருந்த கவலைக் குறிகளெல்லாம் நீங்கிப்போய் விட்டன. எப்போதும் அவர் முகத்தில் சந்தோஷமும் திருப்தியும் நிலவலாயின. விசாலாட்சியோ முன்னிருந்த அழகைக் காட்டிலும் முந்நூறு பங்கு அதிக அழகு படைத்து விட்டாள். அவர்கள் வீட்டிற்கு ஒரு பசு வாங்கினார்கள். அந்த பசுவைக் கறக்கவும், குழந்தைக்குப் பொழுதுபோக்கவும், மற்றபடி வீடு வாயில் பெருக்குதல், பாத்திரந் தேய்த்தல் முதலிய தொழில்கள் செய்யவும், விசாலாட்சி மிகவும் புத்தியும் அனுபவமும் உண்மையும் உழைப்புமுடைய வேளாளக் கிழவியொருத்தியை நியமனம் செய்து, அவளுக்கு வீட்டிலேயே போஜனமும் மாசம் எட்டு ரூபாய் சம்பளமும் ஏற்படுத்தினாள். இவர்களுடைய வீட்டுச் செலவெல்லாம் நூறு ரூபாய்க்கு மேலாகாது. எனவே, மாசந்தோறும் நானூறு ரூபாய்க்குக் குறையாமல் விசுவநாத சர்மா ஒரு பெரிய நாணயமுடைய குஜராத்தி வியாபாரியிடம் வட்டிக்குக் கொடுத்துவரத் தொடங்கினார். சிறிது காலத்துக்குப்பின் விசுவநாத சர்மா தமக்குப் பத்திரிகை தொழிலிலேயே ஏராளமான திரவியம் கிடைப்பதினின்றும், பிள்ளைகளுக்குப் பாடங் கற்றுக் கொடுப்பதாகிய சிரமமான தொழிலை விட்டு விட்டார்.