இவ்விருவரும் ஒருவர்க்கொருவர் படைத்த காதல் மானுஷிக மன்று; தெய்விகம். அது கலியுகத்துக் காதலன்று; கிருத யுகத்துக் காதல். ஒரே பெண்ணிடம் மாறாத காதல் செலுத்துவதாகிய ஏகபத்னி விரதத்தில் ஸ்ரீீ ராமபிரான் புகழ் பெற்றவன். ஆனால் அவனும் பத்தினியிடம் சம்சயங்கொண்டு இலங்கையிலே அவளைத் தீப்புகச் செய்தான். பின்பு உலகப் பழிக்கு அஞ்சி, அவளைக் காட்டுக்குத் துரத்தினான். இவ்விதமான களங்கங்கள் கூட இல்லாதபடி நமது விசுவநாதசர்மா சாக்ஷாத் வைகுண்ட நாராயணனே ஸ்ரீதேவியிடம் செலுத்துவதுபோன்ற பரம பிரேமை செலுத்தினார். சிவன் பார்வதி தேவியிடம் செலுத்தும் பக்தி நமது விசுவநாத சர்மாவால் விசாலாக்ஷியிடம் செலுத்தப்பட்டது. அவளும் இப்படிப் பரம ஞானியாகிய கணவன் தன்னிடம் தேவதா விசுவாஸம் செலுத்துவது கண்டு பூரிப்படைந்து, தான் அவரை சாக்ஷாத் பகவானாகவே கருதி மகத்தான பக்தி செலுத்தி வந்தாள். இப்படியிருக்கையிலே விவாகம் நடந்து ஒன்றரை வருஷமாவதற்குள் விசுவநாத சர்மாவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. அவர் மிகச் சிறந்த ஞானியாயினும் யோகாப்பியாஸத்தால் முக்தி யடைவது சுலபமென்று கருதி மனதைப் பலவகைகளில் இடையறாமல் அடக்கி அடக்கி பலாத்காரஞ் செய்துகொண்டு வந்ததினின்றும், புத்தி கலங்கிவிட்டது. எழுத்து வேலை சரியாக நடத்த முடியவில்லை. வீட்டிலேயே ஒரு நாட்டு வைத்தியர் வந்து பார்த்துச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கலாம் என்று சங்கரய்யர் சொன்னதற்கு விசாலாட்சி அது அவசியமில்லை யென்று சொல்லிவிட்டாள். விசாலாக்ஷியின் கதி மிகவும் பரிதாபகரமாயிற்று. திடீரென்று சுவர்க்கலோகத்தில் இந்திரபதவியினின்று தள்ளுண்டு மண்மீது பாம்பாகி விழுந்த நகுஷன் நிலைமையை இவள் ஸ்திதி ஒத்ததாயிற்று. |