காதலால் மோக்ஷமே பெறலாமென்று விசுவநாத சர்மா சொல்லியதை இவள் மனம் பூர்த்தியாக நம்பித் தனது அற்புத சௌந்தர்யமும் ஞானத் தெளிவுமுடைய அக்கணவனை ஒருங்கே மன்மதனாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் கருதிப் போற்றி வந்து அவனன்பினால் ஆனந்தபரவச மெய்தியிருந்தாள். அவனுக்கு இந்தக் கொடிய நோய் நேர்ந்ததைக் கண்டு துன்பக் கடலில் அமிழ்ந்திப் போய் விட்டாள். இடையிடையே விசுவநாத சர்மாவுக்குப் புத்தி தெளியும் நேரங்களும் வருவதுண்டு. அப்போது, அவர் விசாலாக்ஷியை அழைத்துத் தன் அருகில் இருத்திக் கொண்டு: - "கண்ணே, நீ எதற்கும், எதற்கும், எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாதிருத்தலே முக்தி. கவலைப்படாதிருந்தால் இவ்வுலகத்தில் எந்த நோயும் வாராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய், அல்லது எவ்வித ஆபத்து, நேர்ந்தபோதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின், அவை தாமே விலகிப் போய்விடும். கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம் பயமும், துயரமும், கவலையும் இல்லாதிருந்தால் இவ்வுலகத்தில் எக்காலமும் சாகாமல் வாழலாம். நான் என்னை மீறிச் சில பயங்களில் ஆழ்ந்து விட்டேன். அதனாலேதான் எனக்கு இந்த நோய் வந்திருக்கிறது. இது இன்னும் சிறிது காலத்துக்குள் நீங்கிப் போய்விடும். நமக்கோ பணத்தைப் பற்றிய விசாரமில்லை. நான் மூன்று வருஷம் எழுதாமலும், ஒரு காசுகூட சம்பாதிக்காமலும் இருந்த போதிலும் குஜாராத்தியானிடம் போட்டிருக்கும் பணத்தை வாங்கிச் சம்பிரமமாகச் சாப்பிடலாம். என்னைப்பற்றிய விசாரங்களுக்கும் உன் மனதில் இடங்கொடாதே. இடுக்கண் வந்துற்றகாலை, எரிகின்ற விளக்குப்போல நடுக்க மொன்றானுமின்றி நகுக; தாம் நக்க போதவ் விடுக்கணையரியு மெஃகாம், இருந்தழு தியாவ ருய்ந்தார்? என்று சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் பாடியிருக்கிறார். |