அதாவது, 'துன்பம் நேரும்போது நாம் சிறிதேனும் கலங்காமல் அதை நோக்கி நகைக்க வேண்டும். அங்ஙனம் நகைப்போமாயின் நமது நகைப்பே அத்துன்பத்தை வெட்டு தற்குரிய வாளாய்விடும். அவ்வாறின்றி வீணே உட்கார்ந்து துயரப்படுவதனால் மனிதருக்கு உய்வு நேராது (நாசமே எய்தும்)'. இந்த உபதேசத்தை நீ ஒருபோதும் மறக்காதே. என் கண்ணே, என் உயிரே, விசாலாக்ஷி, நீ என்ன நேர்ந்தாலும் மனதைத் தளரவிடாதே. நீ எக்காலமும் எவ்வித நோயுங் கவலையுமின்றி வாழவேண்டு மென்பதே என் முக்கிய விருப்பம். உன் மனம் நோக நான் பார்த்து சகிக்க மாட்டேன்" என்று பலபல சொல்லி மனைவியைச் சமாதானப் படுத்த முயல்வார். ஆனால், இவர் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையிலேயே விசாலாக்ஷியின் கண்களில் ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிவிடும். அவள் கோவென்றழுது விம்முவாள். இதைக் கேட்டு விசுவநாத சர்மாவும் ஓலமிட்டழத் தொடங்குவார். இப்படி இவர்களிருவரும் கூடிப் பெருங்குரலிட்டழுது கொண்டிருக்கையில் ஒரு சமயம் வைத்தியர் வந்து விட்டார். இந்தக் கோலத்தைப் பார்த்து வைத்தியர் விசாலாக்ஷியைக் காண்பதினின்று நேரும் துக்கத்தால் சர்மாவின் நோய் மிகுதிப்படு மென்றும், ஆதலால் இனிமேல் விசாலாக்ஷி தன் கணவனை அடிக்கடி தனியாகச் சந்திக்கக் கூடாதென்றும், அப்படியே சந்தித்த போதிலும் சில நிமிஷங்களுக்கு மேலே அவருடன் தங்கியிருக்கக் கூடாதென்றும், எப்போதுமே அவர் தன்னிடம் அதிகமாகப் பேச இடங்கொடுக்கக் கூடாதென்றும் அவளிடம் தெரிவித்தார். அவளும் எவ்விதத்தாலும் தன்னால் தன் கணவனுக்கு அதிகக் கஷ்டம் நேரலாகாதென்ற நோக்கத்துடன், ஆகாரம் போடும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில், சர்மாவை அடிக்கடி பார்க்காமலும், அவருடன் அதிகமாகப் பேசாமலும் ஒதுங்கியே காலங் கழித்து வந்தாள். ஆனால் இதினின்று விசுவநாத சர்மாவின் துயரமும் மனக்கலக்கமும் அதிகப்பட்டனவே யன்றிக் குறைவுபடவில்லை. தம்மை விசாலாக்ஷி புறக்கணிக்கிறாளென்று சர்மா எண்ணவில்லை. |