பக்கம் எண் :

விடுதலை

அவர் அப்படி எண்ணக் கூடியவருமல்லர். ஆனால் தனது தேக நிலையைக் கருதி அவள் மிகவும் மனத்தளர்ச்சியும் துக்கமுமெய்தி அதுபற்றியே தோட்டத்துப் பங்களாவுக்கு அவள் அடிக்கடி வந்து தன்னைப் பார்க்காமலும், அதிகமாகத் தன்னிடம் வார்த்தையாடாமலுமிருக்கிறாள் என்று அவர் நினைத்துக்கொண்டார்.

இங்கு வியாதிகளின் சம்பந்தமாக ஒரு சிறு கதை சொல்லுகிறேன். வாந்தி பேதிப் பிசாசு முன்னொரு காலத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு அரபியாவிலுள்ள மக்கா நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்ததாம். போகும் வழியில் பாரஸீகத்தில் பெரிய தபஸ்வியும் ஞானியுமாகிய ஒரு மஹமதியப் பக்கிரி. அந்தப் பேயைக் கண்டு "எங்கே போகிறாய்?" என்று கேட்டார். அது கேட்டு வாந்தி பேதி சொல்லுகிறது: "மக்கா நகரத்தில் இப்போது வருஷத் திருவிழா தொடங்கியிருக்கிறது. நானா திசைகளினின்றும் எண்ணற்ற ஜனங்கள் திருவிழாவுக்காக அங்கு வந்து கூடியிருப்பார்கள். அவர்களை வேட்டையாடும் பொருட்டு மக்காவுக்குப் போகிறேன்" என்றது.

அது கேட்டு அந்த சந்நியாஸி:- "சிச்சீ! மூர்க்கப் பிசாசே! மக்கத்தில் அல்லாவைத் தொழும் பொருட்டு நல்ல பக்தர்கள் வந்து திரண்டிருப்பார்கள். அவர்களை நீ போய்க் கொல்ல நான் இடங்கொடுக்க மாட்டேன்" என்றார்.

அதற்கு வாந்திபேதிப் பேய் சொல்லுகிறது:- 'ஸ்வாமியாரே, என்னையும் அல்லாதான் படைத்து மனித உயிர்களை வாரிக் கொண்டு போகும் தொழிலுக்கு நியமனம் செய்திருக்கிறார். உலகத்தில் நடக்கும் எல்லாக் காரியங்களும் அல்லாவின் செயல்களே யன்றி மற்றில்லை. அவனின்றி யோர் அணுவுமசையாது. ஆதலால் எனது போக்கைத் தடுக்க உம்மால் முடியாது.