முடியுமெனிலும் நீர் அதனைச் செய்தல் நியாயமன்று. மேலும் மக்கத்துக்கு வந்திருப்போர் அத்தனை பேருமே புண்யாத்மாக்களென்றும் தர்மிஷ்டர்களென்றும் உண்மையான பக்தர்களென்றும் நினைத்து விடக் கூடாது. எத்தனையோ பாவிகளும், அதர்மிஷ்டரும், கொரான் விதிகளை மீறி நடப்போரும் அங்கு வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தவிரவும் புண்யாத்மாக்களுக்கு இவ்வுலகில் சாவு கிடையாதென்று அல்லா விதிக்கவில்லை. பாவிகள் மாத்திரமே யன்றி புண்யவான்களும் சாகத்தான் செய்கிறார்கள். வேறு நோய்களால் நெடுங்காலம் வருந்தி வருந்தித் துடித்துத் துடித்துச் சாவதைக் காட்டிலும் என்னால் துரிதமான மரணமெய்துதல் மனிதருக்கு நன்றே யன்றித் தீங்காகாது. ஆதலால் எப்படி யோசித்த போதிலும், நான் சொல்வதை நீர் தடுக்க முயலுதல் பொருந்தாது. எனிலும், மகானாகிய உம்முடைய மனதுக்குச் சற்றே திருப்தி விளைவிக்கத் தக்கதாகிய வார்த்தையொன்று சொல்லுகிறேன். அதாவது, நீர் அங்கு இத்தனை பேரைத்தான் கொல்லலாமென்று தொகை குறிப்பிட்டுக் கட்டளையிடும். அந்தத் தொகைக்கு மேலே நான் ஒற்றை உயிரைக் கூடக் கொல்வதில்லை யென்று பிரதிக்கினை செய்து கொடுக்கிறேன்" என்றது. இங்ஙனம் வாந்தி பேதிப் பேய் சொல்லியதைக் கேட்ட முனிவர் - "சரி; போ. அங்கு அநேக லக்ஷக்கணக்கான ஜனங்கள் திரண்டிருப்பார்கள். அவர்களில் நீ ஒரே ஓராயிரம் பேரைத்தான் கொல்லலாம். அதற்குமேல் ஓருயிரைக்கூடத் தீண்டலாகாது. ஜாக்கிரதை! போய் வா" என்றார். |