நல்லதென்று சொல்லிப் பேய் பக்கிரியிடம் விடைபெற்றுக் கொண்டு மக்கத்துக்குப் போயிற்று. அப்பால் சில தினங்கள் கழிந்த பின், அந்தத் திருவிழாவுக்கு வந்தவர்களில் லக்ஷம் பேர் வாந்தி பேதியால் இறந்து போயினரென்ற செய்தி பக்கிரியின் செவிக் கெட்டிற்று. அவர் தம்மை வாந்தி பேதிப் பேய் வஞ்சித்து விட்டதாகக் கருதி மிகவும் கோபத்துடனும் மனவருத்தத்துடனுமிருந்தார். மறுநாள் வாந்தி பேதிப் பேய் அந்த வழியாகவே மக்கத்தினின்றும் இந்தியாவுக்கு மீள யாத்திரை செய்து கொண்டிருக்கையில் அந்தப் பக்கிரியைக் கண்டு வணங்கிற்று. பக்கிரி பெருஞ் சினத்துடன் அப் பேயை நோக்கி - "துஷ்டப் பேயே, பொய் சொல்லிய நாயே, என்னிடம் ஆயிரம் பேருக்கு மேலே கொல்வதில்லை யென்று வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு அங்கு, மக்கத்திலே போய், லக்ஷம் ஜனங்களை அழித்து விட்டனையாமே? உனக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?" என்றார். இதைக்கேட்டு வாந்தி பேதிப் பேய் கலகல வென்று சிரித்தது. அது சொல்லுகிறது - "கேளீர், முனிசிரேஷ்டரே, நான் உமக்குக் கொடுத்த வாக்குறுதி தவறாதபடியே ஆயிரம் பேருக்கு மேல் ஓருயிரைக்கூடத் தீண்டவில்லை. ஆயிரம் பேரே என்னால் மாண்டவர். மற்றவர்கள் தமக்குத்தாமே பயத்தால் வாந்தியும் கழிச்சலும் வருவித்துக்கொண்டு மாய்ந்தனர். அதற்கு நான் என்ன செய்வேன்? என் மீது பிழை சொல்லுதல் தகுமோ?" என்றது. அப்போது முனிவர் பெருமூச்சு விட்டு - "ஆகா! ஏழை மனித ஜாதியே, பயத்தாலும், சம்சயத்தாலும், உன்னை நீயே ஓயாமல் கொலை செய்து கொண்டிருக்கிறாயே! உன்னுடைய இந்த மகா மூடத்தன்மை கொண்ட மதியையும், இம் மதியை உன்னிடத்தே தூண்டிவிடும் மகா பயங்கரமான விதியையும் நினைக்கும் போது என் நெஞ்சம் கலங்குகிறதே! நான் என் செய்வேன், நான் என் செய்வேன்! நான் என்ன செய்வேன்! சுப்! நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லா ஹோ அக்பர். அல்லா மகான். அவருடைய திருவுளப்படி எல்லாம் நடைபெறுகிறது. அவர் திருவடிகள் வெல்லுக" என்று சொல்லி முழங்கால் படியிட்டு வானத்தை நோக்கியவராய் அல்லாவைக் கருதி தியானம் செய்யத் தொடங்கினார். பேயும் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு போய் விட்டது. |