"குழந்தாய், அர்ஜூன, சமாதானமே நல்லது. சண்டையில் நம்முடைய க்ஷத்திரிய குலத்திற்கு மகிமை யுண்டு. சமாதானத்தில் லோகத்துக்கே மகிமை" என்றார். "நீர் சொல்லுவது நியாயமில்லை" என்று அர்ஜுனன் சொன்னான். "காரணத்தை முதலாவது சொல்ல வேண்டும், அர்ஜூனா, தீர்மானத்தை அதன் பிறகு சொல்ல வேண்டும்" என்றார் கிழவர். அர்ஜுனன் சொல்லுகிறான்: "தாத்தாஜீ, சமாதானத்தில் கர்ணன் மேலாகவும் நான் தாழ்வாகவும் இருக்கிறோம். சண்டை நடந்தால் உண்மை வெளிப்படும்" என்றான். அதற்குப் பீஷ்மாசாரியர்: "குழந்தாய், தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும், தர்மம் வெல்லத் தான் செய்யும். ஆதலால் உன் மனதில் கோபங்களை நீக்கி, சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப் போலே, மனுஷ்யர் பரஸ்பரம் அன்போடிருக்க வேண்டும். அன்பே தாரகம். முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்" என்று சொல்லிக் கண்ணீர் ஒரு திவலை உதிர்த்தார். சில தினங்களுக் கப்பால் அஸ்தினாபுரத்துக்கு வேத வியாஸர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் போய்ச் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா என்று கேட்டான். அப்போது வேதவியாஸர் சொல்லுகிறார்: "இரண்டும் நல்லன. சமயத்துக்குத் தக்கபடி செய்ய வேண்டும்" என்றார். பல வருஷங்களுக் கப்பால் காட்டில் இருந்து கொண்டு துரியோதனாதிகளுக்குத் தூது விடுக்கு முன்பு, அர்ஜுனன் கிருஷ்ணனை அழைத்து "கிருஷ்ணா சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா?" என்று கேட்டான். |