பக்கம் எண் :

தேவ விகடம்

நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, "நாரதரே, இப்போது ஸ்வாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் ஸ்வாமியும் தேவியும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஜாமம் சென்ற பிறகு தான் பார்க்க முடியும். அதுவரை இங்கு உட்கார்ந்திரும், ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கலாம்" என்றார். அப்படியே நாரதர் வலப்பக்கம் உட்கார்ந்தார். அங்கே பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். பக்கத்தில் நின்ற பூதமொன்றை நோக்கி நந்திகேசுரர் "முப்பது வண்டி கொழுக்கட்டையும், முந்நூறு குடத்தில் பாயசமும் ஒரு வண்டி நிறைய வெற்றிலை பாக்கும் கொண்டுவா" என்று கட்டளையிட்டார்.

இமைத்த கண் மூடுமுன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டார். நாரதரோ ஒரு கொழுக்கட்டை யெடுத்துத் தின்று அரைக்கிண்ணம் ஜலத்தைக் குடித்தார். நந்திகேசுரர் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்த இரண்டு மூட்டை பருத்திக் கொட்டையையும், இரண்டு கொள்ளு மூட்டைகளையும், அப்படியே இரண்டு மூட்டை உளுந்தையும், இரண்டு மூன்று கட்டுப் புல்லையும் ஒரு திரணம்போலே விழுங்கிவிட்டுக் கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டார்.

பிறகு வார்த்தை சொல்லத் தொடங்கினார்கள்.

பிள்ளையார் கேட்டார்: நாரதரே, சமீபத்தில் ஏதேனும் கோள் இழுத்து விட்டீரா? எங்கேனும் கலகம் விளைவித்தீரா?