மேற்படி பிரபுவுக்கும் அந்தச் செட்டிக்கும் ஏற்கெனவே மனஸ்தாபம். செட்டி தனக்கு முப்பதினாயிரம் பொன் கொடுக்க வேண்டுமென்று அந்தப் பிரபு நியாயஸ்தலத்தில் வழக்குப் போட்டிருந்தான். செட்டி அந்தப் பணத்தைத் தான் கொடுத்து விட்டதாகவும், நம்பிக்கையினால் கையெழுத்து வாங்கத் தவறினதாகவும், வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை என்றும் சொன்னான். நியாயஸ்தலத்தில் செட்டி வாதத்திற்குத் தக்க ஆதாரமில்லை என்றும், பிரபுவுக்குப் பணம் சிலவுட்பட கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயிற்று. செட்டியினிடமிருந்த (கழனித் தொழில்) அடிமையொருவன் கள்ளுக்குக் காசு வாங்குவதற்காக இவனிடம் வந்து, செட்டியாருக்கு யாரோ ஒரு அய்யர் சூனியம் வைக்கிறாரென்று மாரியம்மன் ஆவேசம் வந்தபோது தன்னுடைய பெண்டாட்டி சொன்னதாகச் சொல்லி விட்டான். செட்டி தன்னுடைய எதிரி வீட்டிலே போய் இருந்து தஞ்சாவூர்ப் பார்ப்பானே சூனியம் வைக்கிறானென்றும், அதனாலேதான் எதிரிக்கு வழக்கு ஜயமாகித் தனக்குத் தோற்றுப்போய் விட்டதென்றும் உறுதியாக நினைத்துக் கொண்டான். ஒரு மனுஷ்யனை அனுப்பித் தன் எதிரியின் வீட்டிலே எதிரியும் சாஸ்திரியும் என்ன பேசிக்கொள்ளுகிறார்களென்பதைத் தெரிந்து கொண்டு வரும்படி ஏற்பாடு செய்தான். அந்த ஆளுக்கு மூன்று பொன் கொடுத்தான். இந்த வேவுகாரன் போய்க் கேட்கையிலே அந்த சாஸ்திரியும் வீட்டுக்காரப் பிரபுவும் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தார்கள். "பிரமந்தான் சத்தியம் மற்றதெல்லாம் சூன்யம்" என்று சாஸ்திரி சொன்னான். |