பக்கம் எண் :

தேவ விகடம்

இதைக் கேட்டு வேவுகாரன் செட்டியினிடம் வந்து எதிரிபக்கத்துக்குச் சூனியம் வைக்க வேண்டுமென்று பேசிக் கொள்ளுகிறார்கள் என்று கதை சொன்னான். செட்டி "பிரமாணம் பண்ணுவாயா?" என்று கேட்டான். "நிச்சயமாகப் பிரமாணம் பண்ணுவேன். சாஸ்திரி வாயினால் சூனியம் என்று சொன்னதை என்னுடைய காதினால் கேட்டேன். நான் சொல்வது பொய்யானால் என் பெண்டாட்டி வாங்கியிருக்கும் கடன்களையெல்லாம் மோட்டுத் தெருப் பிள்ளையார் கொடுக்கக்கடவது" என்று வேவுகாரன் சொன்னான்; இப்படி நாரதர் சொல்லி வருகையிலே, பிள்ளையார் புன்சிரிப்புடன் "அடா! துஷ்டப் பயலே! அவன் பெண்டாட்டியினுடைய கடன்களையெல்லாம் நானா தீர்க்க வேண்டும்! இருக்கட்டும். அவனுக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

அப்பால் நாரதர் சொல்லுகிறார்; மேற்படி வேவுகாரன் வார்த்தையைக் கொண்டு செட்டி தன் எதிரியையும் எதிரிக்குத் துணையான தஞ்சாவூர் சாஸ்திரியையும் பெரிய நஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் இடமாக்கிவிட வேண்டுமென்று துணிவு செய்து கொண்டான். ஒரு கள்ளனைக் கூப்பிட்டுத் தன் எதிரி வீட்டில் போய்க் கொள்ளையிடும்படிக்கும் சாஸ்திரியின் குடுமியை நறுக்கிக் கொண்டு வரும்படிக்கும் சொல்லிக் கைக்கூலியாக நூறுபொன் கொடுத்தான். இதுவரை செட்டியின் அழுக்குத் துணியையும், முகவளைவையும் கண்டு செட்டி ஏழையென்று நினைத்திருந்த கள்ளன் செட்டி நூறு பொன்னைக் கொடுத்ததிலிருந்து இவனிடத்திலே பொற்குவையிருக்கிறதென்று தெரிந்துகொண்டான். மறுநாள் இரவிலே நான்கு திருடரை அனுப்பிச் செட்டி வீட்டிலிருந்த பொன்னையெல்லாம் கொள்ளைகொண்டு போய்விட்டான்.

செட்டியினிடம் கொண்ட பொருளுக்குக் கைம்மாறாக அவனிடம் ஏதேனும் கொடுக்க வேண்டுமென்று நினைத்துச் செட்டியின் கட்டளைப்படியே சாஸ்திரியின் குடுமியை நறுக்கிச் செட்டியிடம் கொண்டு கொடுத்தான்.பொன் களவு போன பெட்டியிலே இந்தக் குடுமியை வாங்கிச் செட்டி பூட்டி வைத்துக் கொண்டான்.