பார்ப்பான் கர்வமடங்கித் தஞ்சாவூருக்குப் போய் சேர்ந்தான். நேற்று மாலையிலே தான் தஞ்சாவூரில் தன் வீட்டிலே போய் உட்கார்ந்து, "தெய்வமே, நான் யாருக்கும் ஒரு தீங்கு நினைத்ததில்லையே! அப்படியிருந்தும் எனக்கு இந்த அவமானம் வரலாமா?" என்று நினைத்து அழுது கொண்டிருந்தான். அப்போது நான் ஒரு பிச்சைக்காரன் வேஷத்துடன் வீதியிலே பின்வரும் பாட்டைப் பாடிக்கொண்டு போனேன். "கடலைப் போலே கற்றோ மென்றே கருவங் கொண்டாயே கல்லா ரென்றே நல்லார் தம்மைக் கடுமை செய்தாயே" இவ்வாறு நாரதர் சொல்லியபோது நந்திகேசுரர் "இந்தக் கதை நடந்ததா? கற்பனையா?" என்று கேட்டார். நாரதர் "கற்பனைதான்; சந்தேகமென்ன?" என்றார். பிள்ளையார் கோபத்துடன் "ஏன் காணும்! நிஜம் போல் சொல்லிக் கொண்டிருந்தீரே! உண்மை யென்றல்லவோ நான் இதுவரை செவி கொடுத்துக் கேட்டேன். இதெல்லாம் என்ன, குறும்பா உமக்கு?" என்றார். "குறும்பில்லை. வேண்டுமென்றுதான் பொய்க் கதை சொன்னேன்" என்று நாரதர் சொன்னார். "ஏன்?" என்றார் பிள்ளையார். அதற்கு நாரதர் "நந்திகேசுரருக்குப் பொழுது போக்கும் பொருட்டாகக் கதை சொல்லச் சொன்னார்; சொன்னேன். தாங்கள் கேட்டதையும் அதோடு சேர்த்துக் கொண்டேன்' என்றார். "நான் கேட்டதை விளையாட்டாக்கி நீர் நந்திக்குத் திருப்தி பண்ணினீரா? என்ன நந்தி இது? எஜமான் பிள்ளை நானா நீயா?" என்று பிள்ளையார் கோபித்தார். |