பக்கம் எண் :

தேவ விகடம்

அப்போது நந்திகேசுரர் முகத்தைச் சுளித்துக்கொண்டு, "பிள்ளையாரே, உனக்கு எவ்வளவு கொழுக்கட்டை கொடுத்தாலும் ஞாபகமிருப்பதில்லை. வாயில் காக்கும் வேலை எனக்கு; உனக்குப்போது போகாது போனால் வேலை செய்பவரை வந்து தொல்லைப்படுத்துகிறாயா? முருகக் கடவுள் இப்படி யெல்லாம் செய்வது கிடையாது. அவர் மேலேதான் அம்மைக்குப் பக்ஷம். நீர் இங்கிருந்து போம். இல்லாவிட்டால் அம்மையிடம் போய்ச் சொல்லுவேன்" என்றார்.

அப்போது நாரதர் சிரித்து, "தேவர்களுக்குள்ளே கலக முண்டாக்கும் தொழிலை நான் முழுதும் நிறுத்தி விடவில்லை" என்றார்.

பிள்ளையாரும், நந்திகேசுரரும் வெட்கமடைந்து நாரதருடைய தலையில் இலேசான வேடிக்கைக் குட்டு இரண்டு குட்டினார்கள்.

அப்போது நாரதர் சிரித்துக் கொண்டு சொல்லுகிறார்: நேற்றுக் காலையிலே பிருஹஸ்பதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் இன்று என்னுடைய ஜன்ம நக்ஷத்திரத்திற்குள்ளே அவருடைய கிரகம் நுழையப் போகிற தென்றும், அதனால் இன்று என்னுடைய தலையில் நந்திகேசுரரும் பிள்ளையாரும் குட்டுவார்களென்றும் சோதிடத்திலே பார்த்துச் சொன்னார். உம்முடைய கிரகசாரங்களெல்லாம் நம்மிடத்திலே நடக்காதென்று சொன்னேன். பந்தயம் போட்டோம். நீங்கள் இருவரும் என்னைக் குட்டினால் நான் அவரிடத்தில் பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்குவதாக ஒப்புக்கொண்டேன். நீங்கள் குட்டாவிட்டால் நமக்கு தேவலோகத்தில் ஆறு சங்கீதக் கச்சேரி இந்த மாதத்தில் ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். அவர் கக்ஷி வென்றது. பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்க வேண்டும்.

அப்போது பிள்ளையார் இரக்கத்துடன் "பதினாயிரம் பஞ்சாங்கத்துக்கு விலை யென்ன?" என்று கேட்டார்.