இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீக்ஷை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. "நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?" என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. "போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய்ப் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு. அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: "மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி. மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம். |