விநாயகரை நினைத்தும் "பிள்ளையாரே, என்னை வேதபுரத்துக் கரை சேர்த்து விட்டால் உமக்கு மூவாயிரத்து முந்நூறு தேங்காய் உடைக்கிறேன். காப்பாற்ற வேண்டும், காப்பாற்ற வேண்டும்" என்று என்னை அறியாமல் கூவினேன். சிறிது நேரத்துக்குள் புயற் காற்று நின்றது. அங்கே ஒரு தோணி வந்தது; தோணியின் அழகு சொல்லி முடியாது. மயில் முகப்பும், பொன்னிறமும் கொண்டதாய் அன்னம் நீந்தி வருவது போலே மெதுவாக என்னருகில் வந்த அத்தோணியிடையே ஒரு மறக்குமாரன் ஆசனமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்தினொளி தீ யொளி போலே விளங்கிற்று. தோணியைக் கண்டவுடனே நான் கை கூப்பினேன். அப்போது தோணிக்காரனிடம் என்னை யேற்றிக் கொள்ளும்படி அவன் கட்டளையிட்டான். அவர்கள் என்னை யேற்றிக் கொண்டனர். அந்தத் தோணியில் ஏறினவுடனே என் உடம்பிலும், மனதிலுமிருந்த துன்பங்களெல்லாம் நீங்கிப் போயின. என் உடம்பைப் பார்த்தால் ராஜாவுடை தரித்திருக்கிறது. பதினாறு வயது பிள்ளையாகவே நானுமிருந்தேன். தோணியிடையிருந்த மன்னன் கரத்திலே வேல் தெரிந்தது. அப்போது கண்ணை விழித்தேன். வேதபுரத்துக் கடற்கரை; மாலை வேளை; மணல்மீது நான் படுத்திருப்பது கண்டேன். நம்பிக்கை யுண்டாகவில்லை. கண்ணை நன்றாகத் துடைத்துப் பார்த்தேன். தீவும், புயற்காற்றும், கனவென்று தெரிந்து கொண்டேன். அந்தத் தீவில் என்னைக் கண்டவுடன் ஓடி மறைந்த பெண்ணின் வடிவம் என் கண் முன்னே நிற்பது போலிருந்தது. பிறகு தோணியிலே கண்ட மன்னன் வடிவம் தெரிந்தது...... வீடு வந்து சேர்ந்தேன். வேதபுரத்தில் மௌனச் சாமியார் என்றொருவர் இருக்கிறார். அவரிடம் கனவைச் சொல்லி, அந்தத் தீவிலே கண்ட பெண் யாரென்று கேட்டேன். "உன்னை யார் காப்பாற்றிய தென்பதை நீ அறியவில்லை. அந்தப் பெண் உன்னிடம் அன்பு கொண்டாள். இரண்டாம் முறை தோணியிலே தோன்றிய இளவரசன் கையில் ஒரு வேல் இருந்தது கண்டனையா? அதுவே உனக்குப் பெண்ணாகத் தோன்றிற்று. உன்னைக் கவலைக் கடலில் வீழ்த்திய பெண்ணே பிறகு வேலாகத் தோன்றி உன்னைக் காத்தாள்" என்று சொன்னார். சக்தியே வேலென்றும் அதுவே உயிருக்கு நல்ல துணையென்றும் தெரிந்து கொண்டேன். சீக்கிரத்தில் நல்ல நாள் பார்த்து வேதபுரத்திலுள்ள ஏழைப் பிள்ளையாருக்கு மூவாயிரத்து முன்னூறு தேங்காய் உடைக்க வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறேன். |