பக்கம் எண் :

கடற்கரை யாண்டி

ஒரு நாள், நடுப்பகல் நேரத்திலே, நான் வேதபுரத்தில் கடற்கரை மணலின்மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின வடகீழ்த் திசையிலிருந்து சில்லென்று குளிர்ந்த காற்று வீசிற்று. குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் வந்து நின்றது. நானும் பொழுது போகாமல், ஒரு தோணிப்புறத்திலேயிருந்து கடலையும் அலையையும் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தேன். 'அடா! ஓயாமல், ஓ-யா-மல், எப்போதும் இப்படி ஓலமிடுகிறதே! எத்தனை யுகங்களாயிற்றோ! விதியன்றோ இந்தக் கடலை இப்படியாட்டுவது?

விதியின் வலிமை பெரிது. 'விதியினால் அண்டகோடிகள் சுழல்கின்றன. விதிப்படியே அணுக்கள் சலிக்கின்றன. மனுஷ்யர், தேவர், அசுரர் முதலிய பலகோடி ஜீவராசிகளின் மனங்களும், செயல்களும் விதிப்படி நடக்கின்றன.