இந்த சூரியன் விதிக்குக் கட்டுபட்டிருக்கிறான். மேகங்களெல்லாம் விதிப்படி பிறந்து, விதிப்படி யோடி, விதிப்படி மாய்கின்றன இவ்வாறு யோசனை செய்து கொண்டிருக்கையிலே அங்கொரு யோகி வந்தார். இவருக்கு வேதபுரத்தார் "கடற்கரையாண்டி" என்று பெயர் சொல்லுவார்கள். ஏழைகள் இவரைப் பெரிய சித்தரென்றும், ஞானியென்றும் கொண்டாடுவார்கள். கண்ட இடத்தில் சோறுவாங்கித் தின்பார். வெயில் மழை பார்ப்பது கிடையாது. சில மாதங்கள் ஓரூரில் இருப்பார். பிறகு வேறெங்கேனும் போய், ஓரிரண்டு வருஷங்களுக்குப் பின் திரும்பி வருவார். இவருடைய தலையெல்லாம் சடை. அரையிலொரு காவித்துணி. வேதபுரத்திலே தங்கும் நாட்களிலே இவர் பெரும்பாலும் கடலோரத்தில் உலாவிக்கொண்டிருப்பார். அல்லது தோணிகளுக்குள்ளே படுத்துத் தூங்குவார். இந்தக் கடற்கரை யாண்டி நடுப்பகலில் நான் அலைகளைப் பார்த்து யோசனை செய்வது கண்டு புன்சிரிப்புடன் வந்து என்னருகே மணலின் மேல் உட்கார்ந்து கொண்டு "என்ன யோசனை செய்கிறாய்?" என்று கேட்டார். "விதியைப் பற்றி யோசனை செய்கிறேன்" என்றேன். "யாருடைய விதியை?" என்று கேட்டார். "என்னுடைய விதியை; உம்முடைய விதியை; இந்தக் கடலின் விதியை; இந்த உலகத்தின் விதியை" என்று சொன்னேன். அப்போது கடற்கரையாண்டி சொல்லுகிறார்: "தம்பி, உனக்கும், கடலுக்கும், உலகத்துக்கும் விதி தலைவன். எனக்கு விதி கிடையாது. ஆதலால் உங்கள் கூட்டத்தில் என்னைச் சேர்த்துப் பேசாதே" என்றார். "எதனாலே?" என்று கேட்டேன். |