இத் தருணத்தில் நமது நாட்டுச் சித்திரத் தொழிலை நாம் பாதுகாக்காமலிருப்போமானால், இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கப்பால் பாரத நாட்டில் எவருக்கும் கண்தெரியாமலே போய்விடும். நிற்க, சித்திரசாலையிலே கந்தர்வ வடிவங்களைப் பார்த்தபோது எனக்கு முன்பு மதன விக்கிரகத்தைக் கண்டவுடன் பிறந்த பரவசநிலை பிறக்கவில்லை. ஏனென்றால், கந்தர்வ நாட்டில் தெய்வப் பிரதிமைகளைத் தவிர, மற்றப் பிரதிமைகள், அந்நாட்டுச் சிற்பிகளின் தொழில் வன்மையைக் காட்டுகின்றனவே யல்லாது, அவர்களுடைய உள்ளத் தேட்டத்தை விளக்குந் தகைமையுடையன அல்ல. எப்படியெனில், பூலோகத்திலே யவன (கிரீஸ்) தேசத்துப் பிரதிமைகள் மிகக் கீர்த்தி கொண்டவை. இப்பிரதிமைகளைச் செய்த சிற்பிகள் குறைவுபட்ட மனித வடிவங்களையே பார்த்தவர்களானும், தமது உள்ளத் தேட்டத்தால் பரிபூர்ண சௌந்தரியத்தைக் கண்டுபிடித்து அதைக் கல்லிலே ஸ்தாபித்திருக்கிறார்கள். இத்தன்மை கொண்ட மேலோர் நாம் நல்ல தொழிலாளிகளென்பது மட்டுமேயன்றி வரபு மான்களென்றும், அருட்காட்சி பெற்றோரென்றும் சொல்லுகிறோம். கந்தர்வ லோகத்திலோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலே பரிபூர்ண சௌந்தரிய முடையவர்களாயிருப்பதால், சிற்பிகளுக்குப் பிரதிபா சக்தியை உபயோகப்படுத்த இடமில்லாமற் போய்விடுகின்றது. நான் அங்கே கண்ட பிரதிமைகள் அளவற்ற வனப்போடு விளங்கினவென்பது மெய்யே யாகும். ஆனால் அவற்றையொத்த வனப்புடையவர்களாகவே அந்நாட்டு ஸ்திரீ புமான்களும் விளங்குகின்றார்கள். என் பக்கத்திலேயிருந்த ஜீவப் பிரதிமையாகிய பிரிய குமாரியைவிட அழகான பிரதிமை ஒன்று அகப்படுமா என்று தேடித் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. |