உணவுக்குப் புறப்பட்டோம். ஐம்புலன்களுக்கும் தெவிட்டாத நல்லின்பம் கொடுக்கும் உலகமாதலால் அங்கு நாப்புலன்களுக்குச் சிறந்ததோர் விருந்து கிடைக்குமென்றெண்ணி நான் மகிழ்ச்சியோடு சென்றேன். ஓர் பூஞ்சோலைக்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஓர் குளிர்ந்த லதா மண்டபத்தில் இருந்து கொண்டு குமாரி "ரஞ்ஜனா, ரஞ்ஜனா" என்று கூவினாள். சிறிது தூரத்திலிருந்து குமாரியின் தம்பியாகிய சித்தரஞ்ஜனன் வந்தான். "எனக்கும் நமது விருந்தாளியாகிய இவருக்கும் உணவு கொண்டுவந்து கொடு" என்றாள். ஒரு விதமாக நகைத்துக்கொண்டு இளைஞன் சென்றான். சில நிமிஷங்களுக்கப்பால் அவனும் அவனுடைய நண்பன் ஒருவனும் கையில் பொற்றட்டுகள் ஏந்திக்கொண்டு வந்து அவற்றை எங்கள் பீடங்களுக்கு முன்னேபோடப்பட்டிருந்த பளிங்கு மேஜையின் மீது வைத்தார்கள். அவ்வுணவு யாதாயிருக்கலாமென்று ஆவலுடன் பார்த்தேன். கனிகள், கனிகள், கனிகள். கனிகளைத் தவிர வேறொன்றுமில்லை. எனது உள்ளக் குறிப்பை எப்போதும் அறிய வல்லவளாயிருந்த குமாரி பின் வருமாறு கூறலாயினள்: - "தோழா, உங்கள் உலகத்தாரைப்போல நாங்கள் உணவிலே மிகுந்த நாட்டம் வைத்துப் பல்வகை கொண்ட சுவைகளைத் தேடுவதில்லை. ஐம்புலன்களிலே நாப்புலன் மற்ற நான்கிற்கும் விரோதி. உணவின்பத்திலே பிரியமுடையவர்கள் செவி, கண் என்ற தெய்வப் புலன்களின் பரம சுகங்களை நான்கு தேர்ந்து உண்பதற்கு வலியிழந்து போய்விடுவார்கள். வெறுமே உயிர் நிற்பதற்கு மட்டிலும் நாங்கள் உண்பதில்லாமல், உணவிலே இன்பம் தேடுவதில்லை. ஆயினும் இக் கனிகளின் சுவை சாமான்யமானதன்று. தின்று பார். பிறகு தெரியும்" என்றாள். சுவையிலும் பயனிலும் மிகுந்த அக்கனிகளைத் தின்று பசி தீர்த்துக் கொண்டோம். பிறகு மதுக்கிண்ணங்களை சித்தரஞ்ஜனன் எங்கள் முன்பு கொண்டு வைத்தான். |