"ஞானரதமே, நீ நம்மை இப்போது கவலையென்பதே இல்லாத உலகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்" என்று கட்டளையிட்டேன். அப்போது மனம் வந்து ரதத்தைத் தடுத்துக் கொண்டது. "அது அத்தனை சுகமான உலகமன்று. கவலை இல்லாமலிருந்தால் மட்டும் போதுமா" வேறு, இன்பங்கள் அனுபவிக்கக் கூடிய இடம் ஏதேனும் தமக்குத் தோன்றவில்லையா? கவலையே இல்லாத இடத்தில் சுகமும் இராது என்று எனக்குத் தோன்றுகிறது. மேலும், - மேலும், - என்னவோ; இன்ன காரணமென்று சொல்ல முடியாது. ஆனால் அங்கு போவதில் எனக்குப் பிரியமில்லை" என்று மனம் கூறிற்று. நான் கோபத்துடன், "சீச்சீ! பேதை மனமே, உனக்கு ஓயாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளையும் உளைச்சல்களையும் கண்டு இரங்கி, நான் உன்னைச் சிறிது நேரமேனும் அமைதி யுலகத்திற்குக் கொண்டுபோய் வைத்துத் திரும்பலாம் என்று உத்தேசித்தேன். இதற்கு நீயே ஆக்ஷேபம் சொல்ல வருகிறாயா?" என்று கண்டித்தேன். மனம் பிணங்குதல் மாறாமல் மறுபடியும் எதிர்த்து நின்றது. |