பிறகு இருவரும் கத்தியைக் கீழே வைத்து விட்டுக் கொஞ்சமேனும் ஆயாசமில்லாமல் மறுபடியும் மலையாளத்தில் சம்பாஷணை செய்யத் தொடங்கி விட்டார்கள். கொஞ்சம் பொழுது கழிந்த பின்பு நெட்டை மாடன் போய் விட்டான். குள்ளச் சாமியார் என்னை நோக்கிச் சொல்லுகிறார்: "தம்பி, காளிதாஸா, இந்த நெட்டை மாடன் ராஜயோகத்தினால் சித்தத்தைக் கட்டினவன். இவனுக்கு ஈசன் யோகசித்திக்கு வாட்போரை வழியாகக் காண்பித்தான். இவனுக்கு நிகராக வாள் சுழற்றுவோர் இந்தப் பூமண்டலத்தில் யாரும் கிடையாது. ஆனால் இவன் தன்னைக் கொல்ல வந்த பாம்பையும் கொல்லக் கூடாதென்று அஹிம்ஸா விரதத்தைக் கைக்கொண்ட மகா யோகியாதலால், கொலைத் தொழிலுக்குரியதான கூர்வாளை இவன் கையினால் தீண்டுவது கிடையாது. உடம்பு நன்றாக வசமாக்கும்படி செய்கிற ஹடயோக வித்தைகளில் ஒன்றாக அதை நினைத்து உன் போன்ற அபிமானிகளுக்கு மாத்திரம் தனது திறமையை சர்க்கஸ் கத்தி வைத்துக் கொண்டு காண்பிப்பான். வள்ளுவர் குலத்தில் நம் ஊரிலேயே இப்படி ஒரு மகான் இருப்பது உனக்கு ஆச்சர்யமாகத் தோன்றலாம். இனிமேல் இதற்கெல்லாம் ஆச்சரியப்படாதே. ஹிந்துஸ்தானத்துப் பரதேசி பண்டாரங்களை யெல்லாம் மிகுந்த மதிப்புடன் போற்று. பரதேசி வேஷத்தைக் கண்டால் கும்பிடு போடு. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ? உனக்கு மேன்மேலும் மகான்கள் தரிசனம் தருவார்கள்" என்றார். நான் ஹிந்துஸ்தானத்தின் மகிமையை நினைத்து வந்தே மாதரம் என்று வாழ்த்திக் குள்ளச்சாமியாரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். அவர் "ஜீவ" என்று வாழ்த்தி விட்டு, விடை பெற்றுக்கொண்டு சென்றார். |