பக்கம் எண் :

குழந்தைக் கதை

உடனே அந்தக் கிழவர் சொல்லுகிறார்: "ஜெர்மனியானுக்குப் பலமான அடி! நம்முடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒருவர் இஸ்திரிக்கடை வைத்திருக்கிறார். அவருக்குத் தினந்தோறும் 'சுதேசமித்திரன்' பத்திரிகை வருகிறது. அவர் அதைப் படித்து சாயங்காலம், சாயங்காலம் நமக்கு விஷயங்களெல்லாம் சொல்லுவார். ஜெர்மனி ராஜா சிங்காதனத்தை விட்டு நீங்கி விட்டானாம். நேசக் கக்ஷியார் சீக்கிரம் பெர்லின் நகரத்தைப் பிடித்துக் கொள்வார்களாம். ஜெர்மனியான் சமாதானம் கேட்டானாம். அது நேரே நம்முடைய இங்கிலீஷ்காரரிடம் கேட்காமல் அமெரிக்காவிலே போய்க் கேட்டானாம். அமெரிக்காவில் ராஜாவே கிடையாதாமே! ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரை அங்கே நாலைந்து வருஷத்துக்கு 'ஆக்டிங்'காக ராஜா மாதிரி வைத்திருக்கிறார்களாம்.

அவர் ஜெர்மன் ராஜாவுக்குப் பதில் வார்த்தையாக உன்னைத் தூள் தூளாகச் செய்த பிறகுதான் சமாதானமேயொழிய அதுவரை சமாதானத்தைப் பற்றி உச்சரிக்கக் கூடாதென்று சொல்லி விட்டாராம். நல்ல வாத்தியார் அவர்" என்று கிழவர் சொன்னார்.

அப்போது முதலியார்: "அப்படியானால் சண்டை சமீபத்தில் முடியப் போகிறதில்லை. நேசக் கக்ஷியால் தம்முடைய பூமியெல்லாம் மீட்டுக் கொண்டு அப்பால் ஜெர்மனியின் எல்லைமேல் படையெடுத்துப் போய் பர்லின் நகரத்தைப் பிடுங்க வேண்டுமானால் அதற்கு இன்னும் குறைந்த பக்ஷம் இரண்டு மூன்று வருஷமாவது செல்லாதா?"

என்றார். அது கேட்டுக் கிழவர்: "ஹும், ஹும், ஹும், ஜெனரல் போஷ் என்ற நேசக்கக்ஷி ஸேனாதிபதி மஹா, மஹா, மஹா, வீரராம். அமெரிக்காவிலிருந்து எண்ணத் தொலையாத புதுத் துருப்புகள் வந்திருக்கின்றனவாம். இன்னும் நாலைந்து மாதத்தில் ஜெர்மனி துவையலாய்ப் போய்விடும், பார்த்துக் கொண்டேயிரும்" என்று சொன்னார்.