பக்கம் எண் :

குழந்தைக் கதை

இங்ஙனம் இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலே, வெல்ல வியாபாரியைச் சூழ ஸ்திரீகளின் கூட்டம் பெருங் கூட்டமாய் விட்டது.

மேடையின் மீது தையல் வேலை செய்துகொண்டு தெருவை நோக்கி யிருந்த குழந்தை ஏதோ பராக்காக இருக்கையிலே, ஒரு காக்கை அந்தக் குழந்தையின் கையைத் தீண்டிக்கொண்டு பாய்ந்து செல்ல அதனால் அக் குழந்தை பயந்து கையிலிருந்த நூல் நழுவி விட்டது. அந்த நூல் என்தலைமேல் வந்து விழுந்தது. அதை நான் அப்படியே தரையில் விழாதபடி கையால் பிடித்துக் கொண்டேன். இதைக் கண்டு குழந்தை மகிழ்ச்சி யடைந்து அந் நூலை என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளும் பொருட்டாகக் கீழே யிறங்கி ரஸ்தாவுக்கு வந்தது.

அந்தப் பெண் குழந்தைக்குச் சுமார் எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். மிகவும் அழகான ரூபம்; செவப்பு நிறம். ஒரேவிதமாக வெள்ளையுமில்லை. சுத்த மஞ்சள் நிறமில்லை. அரை மஞ்சள்; காலை வெயிலின் நிறத்தை அந்தக் குழந்தையின் நிறத்துக்கு ஒப்பிடலாம். அதன் முகத்தில் அற்புதமானதொரு நிலாவொளி வீசிற்று. மானே போல விழிகள். ஆஹா! அந்தக் குழந்தையின் விழிகளிலே தோன்றிய சௌந்தர்யத்தை நான் எங்ஙனம் வர்ணிப்பேன்! அதன் கண்களைப் பார்த்தால் ஒருவனுடைய பாவங்கள், பிணிகள், பயங்களெல்லாம் பறந்தோடிப் போய்விடும்.

அதன் கண்களை நோக்கி நான் வியந்து கொண்டிருக்கையிலே, அப் பெண், "நூலைக் கொடு" என்று கேட்டது.

"உன் பெயரென்ன?" என்று வினவினேன்.

"நூலைத் தா வென்றால் பெயரென்னவா! என் பெயர் பேரில்லாப் பூச்சி, நூலைத்தா" என்றது.

அப்போது நான் அக் குழந்தையை நோக்கி "ஏ, பேரில்லாப் பூச்சி, உன் தந்தை பெயரென்ன?" என்றேன்.