அது மறுபடி "நூலைப் போடு, நூலைப் போடு" என்று கூவிற்று. "உன்னுடைய உண்மையான பெயரைச் சொன்னாலன்றி நான் இந்த நூலைத் தரமாட்டேன்" என்றேன். "என் பெயர் இப்போது சொல்ல மாட்டேன், நீ முதலாவது நூலைக் கொடு. பிறகு சொல்லுகிறேன்" என்றது குழந்தை. இதற்குள் வெல்ல வியாபாரி போய்விட்டான். செட்டிச்சிகளின் கூட்டமுங் கலைந்து விட்டது. முதலியாரும் கிழவரும் எழுந்து வீட்டுக்குள்ளே போய்விட்டனர். தெருவில் சத்தத்தையே காணவில்லை. சாக்கடையோரத்தில் ஓரழகான சேவல் நின்றுகொண்டு அகண்ட லோகத்துக்கும் தானே ராஜா வென்ற பாவனையுடன் "கொக் கொக் கோழி" என்று கூவிற்று. வானத்திலே மரக் கிளைகளினின்றும் குருவிகளின் சங்கீதமும், காக்கைகளின் சுயக்குரலும் செவிப்பட்டன. அக் குழந்தை என்னை நோக்கி மறுபடி: "நூலைக் கொடுப்பாயா? மாட்டாயா? ஒரே வார்த்தை சொல்" என்றது. "மாட்டேன்" என்றேன். அப்போது அக் குழந்தை என்னை மிகவுங் கோபத்துடன் நோக்கித் தரைமேல் எச்சிலுமிழ்ந்து விட்டுத் தன் வீட்டுக் குள்ளே சென்றது. சிறிது நேரத்துக் கெல்லாம் உள்ளேயிருந்து ஒரு மனிதனை அழைத்துக் கொண்டு வந்தது. அந்த மனிதனைப் பார்த்தால் ஒரு மகமதியை சுல்தானைப் போலிருந்தது. |