பக்கம் எண் :

குழந்தைக் கதை

இந்தத் திண்ணையில் உட்காருங்கள். என்ன விசேஷம்? இங்கெதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றான்.

அப்போது நான்: "சரிதான். இந்த மனிதனுக்குப் போது போகவில்லை. நம்மை பேச்சுக் கிழுக்கிறான். நாம் எதிர்பார்க்கிற ஆளும் வரக்காணோம். நமக்குப் போது போக வேண்டுமோ, இல்லையோ? இவனுடனே கொஞ்சம் பேசுவோம். இவனுடைய விஷயத்தையும் தெரிந்து கொள்ளலாம்" என்றெண்ணி அந்த வீட்டுத் திண்ணைமேற் போய் உட்கார்ந்தேன். எதிர்த்த திண்ணையின் மேல் அவன் உட்கார்ந்து கொண்டான். எங்களுக்குள்ளே பேச்சாரம்பித்தது. "தங்களைப் பார்த்தால் இஸ்லாமானவர் மாதிரி இருக்கிறதே, என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.

அதற்கவன் நகைப்புடன்: "இல்லை; இல்லை; நமக்கு மஹ மதியருடைய சிநேகம் அதிகம். அதனால் வேஷம் இப்படியிருக்கிறது. நான் சரியான சுதேசிப் பிராமணன்" என்றான்.

இப்படி யிருக்கையில் இந்த வீட்டுக்குள்ளே இருந்து ஒரு ஸ்திரீ அங்கு வந்தாள். அவளைப் பார்த்தாலும் பெரும்பாலும் துருக்கச்சி போலே தானிருந்தது. தலையை மாத்திரம் மூடிக் கொள்ளவில்லை. நெற்றியிலே ஒரு பச்சிலைப் பொட்டுக் குத்தியிருந்தது. அவளைப் போல அழகு நான் பார்த்ததே கிடையாது. அவளை இத்தனை அற்புதமான சௌந்தர்யத்துடன் படைத்த பிரமதேவன் அவளுக்கு மூக்கு மாத்திரம் நிறைய வைக்க மறந்து போய் விட்டான். எனவே அவள் சீனத்தி போலவும், துருக்கச்சி போலவும், நானாவிதமாகப் புலப்பட்டாள். அவளைக் கண்டவுடன் அந்தப் பிராமண ஸஹா:- "மெத்தையில் நாற்காலிகளெல்லாம் நேரே போட்டு வை; இவரும் இங்கேதான் காபி சாப்பிடுவார். காபி யெல்லாம் தயாராய் விட்டதா?" என்று கேட்டான்.