"தயாராய் விட்டது" என்றாள். "சரி, மெத்தைக்கு வருகிறீர்களா?" என்று அவன் என்னை அழைத்தான். நான் சம்மதப்பட்டேன். மூன்று பேரும் மெத்தைக்குப் போய்ச் சேர்ந்தோம். மெத்தையிலே நீண்ட மாடம்; அங்கு நீண்டதொரு மேஜையின் மேல் பழங்கள், ரொட்டி, பிஸ்கோத்து, ஒரு பெரிய காப்பிச் சொம்பு, நாலைந்து வெண்கலக் கிண்ணங்கள் இவையெல்லாம் அடுக்கி வைத்திருந்தன. நான்கு நாற்காலிகள் போட்டிருந்தன. குழந்தையையுஞ் சேர்த்து நாங்கள் நால்வருமாக இருந்து பழங்கள் முதலியவற்றைத் தின்று காபி குடித்தோம். அப்போது நான் அந்தப் பிராமணனை நோக்கி "இவ்வளவு நேரமாயும் நான் உங்கள் பெயரை விசாரிக்கவில்லை. தங்களுடைய நாமதேய மென்ன?" என்று கேட்டேன். அதற்கவன் என்னை நோக்கி: "உங்கள் பெயரென்ன?" என்றான். "என் பெயர் குமாரதேவ முதலியார்" என்றேன். "தொழில் என்ன?" என்று கேட்டான். "பத்திரிகைகளுக்கு வியாசங்களெழுதுவது என்னுடைய தொழில்" என்றேன். "சரிதான்" என்று சொல்லி ஒரு சுருட்டை எடுத்து முனையைக் கிள்ளி வாயிலே வைத்துக் கொண்டான். என்னிடம் ஒரு சுருட்டை நீட்டினான். "நான் சுருட்டுப் பிடிக்கும் வழக்க மில்லை" என்று சொல்லி விட்டேன். அப்பால் தன் மனைவியை நோக்கி, அவன் "தீப் பெட்டி கொண்டு வா" என்றான். அவள் கீழே யிறங்கிப் போய் ஒரு தீப் பெட்டியும், இரண்டு ரோஜாப் பூச் செண்டும், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, லவங்கம், ஏலக்காய் ஜாதிக்காய், ஜாதிப்பத்திரிகளும் கொண்டுவந்து மேஜையின் மீது வைத்தாள். |