அந்தப் பிராமண ஸாஹப் சுருட்டுப் பிடிக்கலானான். நான் தாம்பூலம் தரித்துக் கொண்டேன். பிறகு நான் மறுபடி அந்தப் பிராமணனை நோக்கி: "உங்களுடைய நாமதேயத்தை இன்னும் தெரிவிக்க வில்லையே" என்றேன். அப்போதவன்: "என் பெயர் கங்காதர சாஸ்திரி" என்றான். "இந்தக் குழந்தையின் பெயரென்ன?" என்று கேட்டேன். "நித்திய கல்யாணி" என்றான். பிறகு காலையில், அந்தக் குழந்தையிடம் நான் பெயர் சொல்லும்படி கேட்டபோது அது சொல்ல மாட்டே னென்று சாகஸம் பண்ணியதைக் கங்காதர சாஸ்திரியிடம் எடுத்துரைத்தேன். அப்போது கங்காதர சாஸ்திரி அந்தக் குழந்தையின் கீர்த்தி பிரதாபங்களை யெல்லாம் என்னிடம் விஸ்தரித்துச் சொல்லத் தொடங்கினான். "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பது பழமொழி. அப்படி யிருக்க இத்தனை அழகும் முகத்தில் ஞானவொளியு முடைய அதன் பிதா புகழ்ச்சி புரிவது சகஜமேயாதலால், அவன் சொல்வதை யெல்லாம் நான் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். கடைசியாக அவன்: "மேலும் நம்முடைய நித்திய கல்யாணிக்கு சங்கீதத்தில் ஆச்சரியமான ஞானம். கணக்கிலும் அப்படியே. இலக்கியத்திலும் அப்படியே. லௌகிக விஷயங்களிலும் இக் குழந்தைக்கு நல்ல ஞானமுண்டு. "சுதேசமித்திரன்" பத்திரிகையில் சண்டைத் தந்திகளை ஒன்று விடாமல் வாசித்துக் கொண்டு வருகிறாள். பூ மண்டல விஷயங்களெல்லாம் நித்திய கல்யாணிக்கு ஸ்பஷ்டமாகத் தெரியும்" என்றான். |