இப்படி யிருக்கையில் வானத்தில் நான்கு புறங்களிலுமிருந்து மேகங்கள் வந்து சூழ்ந்து மழை பலமாகப் பெய்யத் தொடங்கிற்று. அப்போது நான் காலையில், சிறிது நேரத்திற்கு முன்பு எதிர் முதலியாரும் கீழ்வரும் சண்டை விஷயமாகப் பேசியதை ஞாபகத்தில் கொண்டு அவர்களுடைய லௌகிக ஞானத்துக்கும் இக் குழந்தையின் ஞானத்துக்குமுள்ள தாரதம்யத்தைப் பரிசோதனை செய்வோம்; மழையோ பலமாகப் பெய்கிறது; நாம் எதிர்பார்த்த மனிதன் இன்று வரமாட்டான்; அந்தக் காரியத்தை நாளைக் கவனித்துக் கொள்ளலாமென்று யோசனை பண்ணி, அக் குழந்தையை நோக்கி, "பேரில்லாப் பூச்சி. இந்த யுத்தம் என்ன நோக்கங்களுடன் நடக்கிறது? சொல், பார்ப்போம்" என்றேன். "பூமி பாரங் குறைவதற்காக நடக்கிறது" என்றது. "ஹும். அதைக் கேட்கவில்லையம்மா. ஜெர்மனியக் கக்ஷியார் என்ன நோக்கங்களுடன் போர் செய்கிறார்கள்? நம்முடைய நேசக் கக்ஷியார் என்ன கருத்துக்களுடன் யுத்தம் நடத்துகிறார்கள்?" என்று கேட்டேன். "நேசக் கக்ஷியாரை ஜயிக்க வேண்டுமென்ற கருத்துடன் ஜெர்மனி யுத்தம் நடத்துகிறது. ஜெர்மனியை ஜெயிக்க வேண்டுமென்கிற எண்ணத்துடன் நேசக் கக்ஷியார் யுத்தம் பண்ணுகிறார்கள்" என்று குழந்தை சொல்லிற்று. "இது பொதுப்படையான வார்த்தை யன்றோ குழந்தாய்? இரு திறத்தாரின் யுத்த லக்ஷ்யங்கள் எவை?" என்று கேட்டேன். "பரஸ்பரம் வெற்றி பெற வேண்டுமென்பதே லக்ஷ்யம்" என்று அக் குழந்தை மீட்டும் சொல்லிற்று. |