அடுத்த நாள் சத்திய லோகம் சென்றேன். அங்கே மாசற்ற சூரியப் பிரகாசம் போன்ற ஒளியொன்று பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். ஆனால் வானத்தில் சூரியனில்லை. அவ்வுலகத்தின் கண் மத்திய பாகத்தில் ஓர் திவ்ய வடிவம் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதன் முகத்திலிருந்தே கிரணங்கள் பொங்கி வெளிப்பட்டன. அக்கிரணங்களின் ஒளியே வானத்திலுஞ் சென்று மோதுவது கண்டேன். பல பல திசைகளிலே என் ரதத்தைத் திருப்பிவிட்டேன். அந்நாட்டு ஜனங்களெல்லாம் அவரவர்கள் பாட்டில் மிகுந்த முயற்சியுடையவர்கள் போலப் போகிறார்கள். சிற்சில ஜனங்கள் வெயர்க்க வெயர்க்கக் கஷ்டத்துடன் நடந்து செல்கிறார்கள். வேறு சிலர் சிறகு புடைத்துக்கொண்டு அதி வேகமாய்ப் பறக்கிறார்கள். சிலர் மலர்ந்த முகத்துடன் போகிறார்கள். சிலர் மிகக் களைப்படைந்தவர் போலக் காணப்படுகிறார்கள். சிலர் திடீர் திடீரென்று வந்து தோன்றி அவ்வொளி பொறுக்கமாட்டாமல் கண்ணைக் கையால் மூடிக்கொண்டு அவ்வப்பொழுதே மறைந்து விடுகிறார்கள். இங்ஙனம் மறைந்து செல்வோர் என்னைப்போலப் புதிதாகப் பார்க்க வந்தவர்களென்றும், இங்கிருக்க முடியாமல் ஓடி வேறு வேறு உலகங்களுக்குப் போகிறார்களென்றும் தெரிந்து கொண்டேன். சிலர் தேவர்களைப் போலிருந்தனர். அவர்களே மலர்ந்த முகத்துடன் உல்லாஸமாகவும் வேகமாகவும் சுற்றித் திரியும் கூட்டத்தார். என்போன்ற மனித உருவ முடையோர்களிலே தான் பலர் களைப்புக் காட்டினர். கந்தர்வ லோகத்திற்கு வந்தவுடன் எனக்கு உருவ மாறுபாடு தோன்றியது போல இங்கே உண்டாகவில்லை. ஓடிப் போனவர்களும் மனித வர்க்கத்தினரேயாம். பருத்த தொந்தியுடன் கையில் பொற்காப்புப் போட்டுக் கொண்டு ஒருவன் வந்தான். அவன் ஓவென்றலறிக் கொண்டு ஓடிப்போய் விட்டான். ஒருவன் மனைவி மக்களுடன் வந்து சேர்ந்தான். "இங்கேன்காணும் கூட்டிக் கொண்டு வந்தீர்" இங்கே, கடைத் தெருவா, கிடைத் தெருவா, கோயிலா, குளமா, வேடிக்கையா, விளையாட்டா? ஒரு மண்ணையுங் காணவில்லை. அவனவன் பைத்தியம் பிடித்தது போல ஓடிக்கொண்டு திரிகிறான். நான், குழந்தைகளையுங் கொண்டு இங்கே ஒரு க்ஷணங்கூட இருக்க மாட்டேன். |