ஊருக்குப் போகலாம் வாரும்" என்று பொதிமாட்டைப் போலிருந்த அந்த ஸ்திரீ கத்தினாள். அந்த மனிதன் - "இருடி, இரு. இந்த ஒரு கிரணத்தை மட்டிலும் பார்த்து விட்டு வருகிறேன், அவசரப்படாதே" என்றான். "கிரணமுமாச்சு, மரணமுமாச்சு. புறப்படும்" என்று அவள் ஏதோ கூச்சலிட்டாள். அவன் மனமில்லாவிடினும் அவள் செய்யும் தொல்லையை எதிர்க்கத் திறனற்றவனாய் மறைந்து விட்டான். இன்னுமொருவன் எட்டு மூட்டைகளை ஒரு வண்டியில் சுமத்திக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். மற்றவர்களெல்லாம் என்னிடம் பேசாமலிருக்க, இவன் மட்டிலும் என்னருகே வந்து, "ஏனையா, ஏடுகளெல்லாம் மிக விசேஷமானவை. ஏதேனும் உமக்கு வேண்டியதைப் பரிசோதனை செய்து பார்த்து விலைக்கு எடுத்துக் கொள்கிறீரா?" என்று கேட்டான். அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே, பின்னே நின்ற வண்டியில் நெருப்புப் பிடித்து ஏடுகள் சாம்பாவது கண்டு நான், "அதோ, பாரையா?" என்றேன். அந்த மனிதன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு சத்திய லோகத்தை நிந்தனை செய்து கொண்டே போய் விட்டான். இன்னும் எத்தனையோ ஜனங்கள் - மனவுறுதியில்லாதோர், சித்தத்தைப் புலன் வழியிலே சிதறவிட்டோர், சத்தியத்தில் மெய்யன்பில்லாது போலியன்பு பாராட்டும் வேஷதாரிகள், இவர்களனைவரும் வந்து வந்து மறைந்து விட்டார்கள். இது நிற்க, மேற்கூறப்பட்ட ஒரு மனிதனைத் தவிர வேறெவருமே என்னிடம் வார்த்தையாடவில்லை யென்று சொல்லியிருக்கிறேன். கல்விப் பயிற்சிக்குத் துணைவேண்டுமென்று பெரியார் சொல்லுகிறார்கள். அது மெய்யே. ஆனால் உண்மைத் தேட்டத்திற்குத் தனித்தனியே போக வேண்டுமென்று இப்பொழுதுதான் கண்டேன். உண்மை தேடப்போகும்பொழுது துணை கூட்டிக்கொண்டு போகலாகாது. உண்மையைக் கண்டு மீண்ட பின்பு அதைப் பிறருக்குக் கூறலாம், கூறுதல் |