கடமை. ஆனால், ஆரம்பத்தில் தன்னந்தனியாகச் செல்ல வேண்டும். இன்னொருவனைத் துணையாக அழைத்துச் செல்வாயாயின், அவனுக்கும் உனக்கும் விவாதங்கள் உண்டாகும். 'மாறுபடு தர்க்கம் தொடுப்'பதனால் அறிவிலே கலக்க முண்டாகுமல்லாது, தெளிவு ஏற்படாது அறிவுத் தெளிவிலேதான் உண்மை தோன்றும். மேலும் இன்னொருவனோடு சேர்ந்து உண்மை தேடப் போவாயானால், அவன் ஒரு பாதையில் இழுப்பான். நீ மற்றொரு பாதையிலே இழுப்பாய். இரண்டிலொன்று யதார்த்த வழியாக இருக்கும். ஆனால் உங்களுக்குள் விவாதம் தீரும் பொருட்டு, நீங்கள் பெரும்பாலும் என்ன செய்வீர்களென்றால், "அப்பா நீ சொல்லியதும் வேண்டாம். நான் சொல்லியதும் வேண்டாம். இரண்டுக்கும் நடுவாக ஒரு வழியிலே போவோம்" என்று பொது உடன்பாடு செய்து கொள்வீர்கள். இந்தப் பொது உடன்பாடு செய்தாலொழிய இருவருக்கும் திருப்தியேற்படாது. இந்தப் பொது உடன்பாட்டுப் பாதை உங்களைக் கழுத்து வரை சேறுள்ள குழிகளிலும், ஏரிகளிலும், மடுக்களிலும், முள்ளிலும், கல்லிலும் பொதி மணலிலுங்கொண்டு இறங்கச் செய்யும். ஆரம்பத்திலே உங்களுக்கு இயற்கையாகக் காணப்படும் இரண்டு பாதைகளில், யதார்த்தப் பாதையை நீக்கிப் பொய்ப் பாதையிலே போனபோதிலும், ஒருவேளை நல்லது. இறுதி வரையில் போய், அங்கே தேடிய உண்மையில்லா திருத்தல் கண்டு, மறுபடி மீண்டு நல்ல மார்க்கத்திலே புகலாம். நீங்கள் அப்படிச் செய்யமாட்டீர்கள். உடன்பாட்டுப்பாதையொன்று கொண்டு அதிலேதான் போவீர்கள். அந்த வழி சூனியத்திலேதான் கொண்டுவிடும். ஞானிகளுடைய "சமரஸம்" பிழையென்று நான் கூறியதாகக் கொள்ளவேண்டாம். சாமானியர்கள் செய்துகொள்ளும் 'ஒப்பு' அதாவது உடன்பாடு எப்போதும் பிழைஎன்பதையே வற்புறுத்திச் சொல்லுகிறேன். எனவே, சத்தியலோக யாத்திரை செய்வோர் யாரும் வீண் சம்பாஷணையிலே காலங் கழிப்பதில்லை யென்பதை அறிந்து கொண்டேன். ஆதலால், நானும் பிறர்களைத் தொந்தரவு செய்யலாகாதென்று சும்மா இருந்து விட்டேன். |