பக்கம் எண் :

சத்திய லோகம்

கிரண பரிசோதனையிலே எனக்குப் புத்தி செல்லவில்லை. மத்ய பாகத்திலேயிருந்த திவ்ய வடிவத்தினருகே நேராகப் போய்விட வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. அப்போது உயர ஓர் தொனி பிறந்தது. அதிலே கவனம் செலுத்தினேன். அது சொல்லிற்று: - "நடுவே யிருக்கும் உருவமே பிரமன். அது சத்திய ஸ்வரூபம். திடீரென்று அதனருகே பாய்ந்து விடுதல் யாராலும் முடியாது. ஒரு கிரணத்தைப் பற்றிக்கொண்டு, அதன் வழியே அணுவணுவாக நகர்ந்து செல்லவேண்டும். ஒரே பாய்ச்சலாகப் பாய முயற்சி செய்து நீ வீணே ரதத்தை உடைத்துக் கொள்ள வேண்டாம்" என்று.

எனக்குச் சோம்பர் அதிகம். கிரணங்களோ நெடியவை. இவற்றின் வழியாய் மெல்ல மெல்லப் புழு ஊர்வதுபோல ஊர்ந்து செல்ல எனக்கு மனம் இணங்கவில்லை.

"நன்று. இப்பிரமன் விஷயத்தைப் பின்பு பார்த்துக் கொள்ளுகிறேன். இப்போது இந்நாட்டைச் சுற்றி ஓரமாக ஓர் வளையமிட்டு வருகின்றேன்" என்றெண்ணித் தேரைப் பிரதக்ஷிணமாகச் செலுத்தினேன்.

சிறிது தொலைவு கடந்தவுடனே வேறு வர்ணங்கொண்ட ஒளி கண்டேன். அவ்விடத்தினின்று எங்கே பார்த்தாலும் அந்தப் புதிய வர்ணமே காணப்பட்டது. "இதென்ன விந்தை!" என்று பிரமிப்பு அடைந்து அப்பால் சென்றேன். போகப் போக, புதிய புதிய வர்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தன.