பக்கம் எண் :

சத்திய லோகம்

உண்மை பல வர்ணங்களுடையது என்று தெளிந்துகொண்டேன். நெடுநேரத்தின் பிறகு வடக்குக் கோட்டை வாயிலருகே வந்து சேர்ந்தேன். அங்கிருந்து பார்க்கும்போது மறுபடியும் பிரமனுடைய தெய்வீக வடிவம் என் கண்ணுக்கு நேரே எதிர்க்கெதிராக விளங்கிற்று. இதென்ன செய்தியென்று யோசனை செய்தேன். முகம் முன்பு தோன்றியது போலவே தானிருக்கிறதா என்று கூர்ந்து பார்த்தேன். அப்போது ஒரு புதிய அற்புதங் கண்டேன். நான் எவ்வளவுக்குக் கூர்மையாகப் பார்க்கிறேனோ அவ்வளவு அத் திருமுகத்தின் ஒளி அதிகரித்து வரலாயிற்று. சிறிது பொழுதுக்கப்பால் என் கண்கள் கூசத் தொடங்கிவிட்டன. அதினின்றும் கண்களை மீட்டுக்கொண்டேன். மறுபடியும் முன் கேட்டது போன்ற ஓர் தொனி பிறந்தது:-

"மானிடா! உண்மை தொடக்கத்தில் தெளிவாகத் தெரிவது போலத் தோன்றும். கொஞ்சம் கவனம் செலுத்துவாயானால் கண் கூசத் தொடங்கிவிடும். நீ தளர்ச்சி பெறாமல் ஓர் கிரணத்தைப் பற்றிக்கொண்டு நெருங்கி நெருங்கிப் போவாயாயின், பிறகு கண் வருத்தம் தீர்ந்துவிடும். இறுதியில் நீ அருகே வந்த பிறகு உண்மை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெற்றெனத் தெளிந்து புலப்படும்."

இதைக் கேட்டவுடனே, எனக்கு ஓர் கிரணத்தைத்தான் பற்றிச் செல்லலாமா என்ற விருப்பம் நிகழ்ந்தது. மறுபடியும் எனது சோம்பர்க்குணம் மனதிலே பிரதானமாய் விட்டது. "ஐயோ! இந்தச் சோம்பர் என்ற பாவி! மண்ணுலகத்துப் பெருமையையும், பொருளையும் நான் விரும்பிய காலத்தில் இதுதான் வந்து குறுக்கிட்டது. இப்பொழுது விதிவசத்தால் அவ்வித விருப்பங்களெல்லாம் அகன்றுவிட்டன. எனவே சத்தியலோகத்திற்கு உண்மைத் தேட்டத்தால் வந்து நிற்கும் போதும் அத் தீய சோம்பர் வந்து கெடுக்கின்றது" என்று பலவாறு வருத்த மடைந்தேன்.