பக்கம் எண் :

சத்திய லோகம்

அழுதாற் பயனென்ன, நொந்தாற் பயனென்ன? ஒன்றும் ஆவதில்லை. முன்னர்ச் செய்தது பின்னை விளையும். அவரவர் செய்கைகளின் பயனையே அவரவர் நுகர்தற்குரியர். தர்மதேவதையின் ஆட்சிக்குட்பட்ட இவ்வுலகில் தத்தம் செய்கைப் பயனுக்குமேல் ஓரணுக்கூடவேனும் அன்று அதற்கு ஓரணுக் குறையவேனும் உயிர்கள் பெறவொண்ணாது. எனது இயற்கையிலே சோம்பரை வளர்த்து விட்டேன். இப்போது அதன் பயனை நுகர்கின்றேன். மண்ணுலகத்துப் பொருளும் பெருமையும் மிக இழிவுடையன வாயினும், அவற்றைக்கூடச் சோம்பரால் துறந்திருப்பவன் நற்கதியடைய மாட்டான். உழைத்துத் தேடி அவற்றின் இயற்கையை அனுபவித்துப் பார்த்துப் பின்பு துறக்க வேண்டும். பாடுபட்டுத் தேடிப் பணத்தை அடைபவனைக் கவி நிந்தனை செய்யவில்லை! அதைப் போற்றுதற் குரியதோர் பெருமையுடைய தென்றெண்ணிப் புதைத்து வைப்பவனையே நிந்தை செய்கின்றார். அதை நன்கு செலவிடுகிறானா அல்லது துர்வினியோகம் செய்கிறானா என்பதைப் பற்றி இங்கு விவகாரமில்லை. அது வேறு விஷயம். அதைத் தேடிக் கண்டு அனுபவித்துணர்ந்த பிறகுங்கூட அதன் சிறுமையை அறிந்து வெறுத்துத் தள்ளிவிடாமல், அதில் மேன்மேலும் ஆசை கொண்டு ஆதரிப்பவனே, கேடுகெட்ட பாவி யாவானென்று கவி சொல்லுகிறார்.

ஆம். மண்ணுலகத்துப் புலைப்பொருளைக்கூடச் சோம்பரால் பிரிந்திருப்பவன் புகழ்ச்சிக் குரியவனாகமாட்டான். இடைவிடாத உழைப்பினாலேதான் அண்ட பஹிரண்டங்கள் இயங்குகின்றன. தமோகுணம் நாசத்துக்கு முற்குறி. சோம்பர் அழிவுக்குக் காரணம். யமபடர்கள் மூதேவியின் மக்கள்.